Load Image
dinamalar telegram
Advertisement

அரைகுறை நேர்மையால் அமைச்சர்கள் புலம்பல்!

Tamil News
ADVERTISEMENT

அரைகுறை நேர்மையால் அமைச்சர்கள் புலம்பல்!''மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, தி.மு.க., நிர்வாகிக்கு குடுக்க போறாளாம் ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''என்ன சொல்றீங்க...'' என அதிர்ச்சியுடன் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவையில நடந்த உள்ளாட்சி தேர்தல்ல முறைகேடு நடந்திருக்குன்னு பதிவான வழக்கு விசாரணை, நிலுவையில இருக்கு... ஆனா, அதை பற்றி கவலைப்படாம, மாமன்ற கூட்டத்துல இஷ்டத்துக்கு தீர்மானம் நிறைவேத்தறா ஓய்...

''மே மாசம் நடந்த கூட்டத்துல ராத்திரி, 9:00 மணிக்கு, 'டேபிள் சப்ஜெக்ட்'னு சொல்லி விவாதமே இல்லாம, 40 தீர்மானங்களை நிறைவேத்திண்டா... ஜூன் மாச கூட்டத்துல, ஐகோர்ட் உத்தரவு, நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தலை எல்லாம் மீறி, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை, தி.மு.க., நிர்வாகிக்கு குடுக்கறதா தீர்மானம் நிறைவேத்தியிருக்கா ஓய்...

''இது பத்தி கேட்டா, 'இதனால, மாநகராட்சிக்கு எந்த இழப்பும் இல்லை... தமிழக அரசு ஒப்புதலுக்கு தான் தீர்மானத்தை அனுப்பியிருக்கோம்'னு, நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மழுப்பறா ஓய்...

''இதே மாதிரி, அ.தி.மு.க., ஆட்சியில தீர்மானம் அனுப்பினப்ப, அரசு தரப்புல அதை நிராகரிச்சுட்டா... இப்ப, தி.மு.க., அரசு என்ன செய்யப் போறதுன்னு பார்க்கலாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''மகனுக்காக, 40 வருஷம் கூடவே இருந்த வரை கழற்றி விடுறாருங்க...'' என, 'உச்' கொட்டியபடியே அடுத்த தகவலை தொடர்ந்தார் அந்தோணிசாமி...

''ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவோட மகன் துரைக்கு, அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் பதவி குடுத்தாங்க... இதனால, வைகோ கடும்
விமர்சனத்துக்கு ஆளானாருங்க...

''பதவிக்கு வந்தவுடனே, வைகோகிட்ட நெருக்கமா இருந்த நிர்வாகிகளை ஓரம்கட்டி, கட்சியை தன் கட்டுப்பாட்டுல கொண்டு வர்ற வேலையில துரை தீவிரமா இறங்கிட்டாருங்க... வைகோகிட்ட நீண்ட காலமா கார் டிரைவரா இருந்தவரை, வீட்டுக்கு அனுப்பிட்டாருங்க...

''வைகோவிடம், 40 வருஷமா அரசியல் உதவியாளரா இருந்த அருணகிரியும் ஓரம்கட்டப்படுறார்னு, கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''அரைகுறை நேர்மையா இருக்காவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''அதென்னப்பா அரைகுறை நேர்மை...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஒவ்வொரு மாவட்டத்துலயும் அரசு பணியில இருக்கிறவங்க, இடமாறுதல் கேட்டு, உள்ளூர் ஆளுங்கட்சியினர் வழியா அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை வைப்பாங்க... குறிப்பா, பள்ளிக்கல்வி, சுகாதார துறைகள்ல நிறைய பேர் இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் குடுத்திருந்தாவ வே...''உள்ளூர் அமைச்சர்களும், அதை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் களுக்கு பரிந்துரை செஞ்சிருக்காவ... அந்த துறை அமைச்சர்களோ, 'கவுன்சிலிங் முறையில தான் இடமாறுதல் நடக்குது... அதனால சிபாரிசு எடுபடாது'ன்னு சொல்லிட்டாவ வே...


''ஆனா, சிலர் கவுன்சிலிங்குல கலந்துக்காமலே, 'குடுக்க வேண்டியதை குடுத்து' துறை அதிகாரிகள் உதவி யுடன், இடமாறுதல் வாங்கிட்டாவ... இதை கவனிச்ச கட்சிக்காரங்க, 'அவங்களுக்கு மட்டும் எப்படி இடமாறுதல் கிடைச்சது'ன்னு கேட்க, உள்ளூர் அமைச்சர்கள் பதில் சொல்ல முடியாம முழிக்காவ வே...

''இதனால, 'நேர்மையா இருந்தா, முழுசா இருக்கணும்... அரைவேக்காடா இருந்தா எப்படி'ன்னு, கோட்டை யில பல அமைச்சர்கள் குமுறிட்டு இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.


****************

அமைச்சர் வீட்டில் கோலோச்சும் இரட்டையர்!''நேர்மையான அதிகாரின்னு பேர் எடுத்தா மட்டும் போதுமா ஓய்...'' என்றபடியே அரட்டையை ஆரம்பித்து வைத்தார், குப்பண்ணா.

''எந்தக் கோவில் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கற பிரபல முருகன் கோவிலுக்கு, ரெண்டு மாசம் முன்னாடி புதுசா ஒரு பெண் அதிகாரியை நியமிச்சா... அந்தம்மா ரொம்பவே, 'ஸ்ட்ரிக்ட்'டா இருக்காங்க ஓய்...

''அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை யாரா இருந்தாலும், சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்காம, முருகனை தரிசனம் பண்ண முடியாதபடி கடிவாளம் போட்டாங்க... இதனால, கோவில் வருமானம் பல மடங்கு உயர்ந்தது ஓய்...

''அதே நேரம், பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து குடுக்கறதுல, பெண் அதிகாரி அலட்சியம் காட்டுறாங்களாம்... பக்தர்கள் புகார் தெரிவிக்க, ஹிந்து அறநிலையத் துறை சார்பா, பெண் அதிகாரிக்கு ஒரு மொபைல் போன் குடுத்திருக்கா ஓய்...

''அதுக்கு அடிச்சா எப்பவுமே, 'சுவிட்ச் ஆப்'ல தான் இருக்கு... அதிகாரிகளும், பத்திரிகைகாரங்களும் அவங்க, 'பர்சனல்' நம்பருக்கு அழைச்சாலும், எடுக்கறது இல்லை... நேர்ல போனாலும், பார்க்க மாட்டேங்கறாங்க... இதனால, கோவில்ல நடக்கற முறைகேடுகளை அவங்க கவனத்துக்கு கொண்டு போக முடியலை ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சரி, விஜயா அப்புறமா பேசுறேன்...'' என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடி வந்த அந்தோணிசாமி, ''டெண்டர் முறைகேட்டுல சிக்கப் போறாங்க...'' என, அடுத்த தகவலை சொன்னார்.

''யாருன்னு சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில, பேனா, பென்சில் துவங்கி மருத்துவ உபகரணங்கள் வரை, 'சப்ளை' செய்ய ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் குடுத்திருக்கிறதா தொடர்ந்து புகார் வந்துச்சுங்க...

''மருத்துவக் கல்லுாரி இயக்குனரகம் நடத்திய ரகசிய விசாரணையில், புகார் உண்மை தான்னு தெரியவந்துச்சு... அப்புறம் என்ன, அதிகாரிகள் களம் இறங்கிட்டாங்க... மருத்துவ கல்லுாரி டீனிடம் விசாரணை நடத்துச்சு... 'விரைவில் நடவடிக்கை இருக்கும்'னு சொல்றாங்க...

''மருத்துவமனையின் முன்னாள் டீன் ஒருத்தர் சமீபத்துல, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டாருங்க... இதுக்கும் விசாரணைக்கும் தொடர்பு இருக்கிறதா பேச்சு அடிபடுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ரெட்டையர்கள் மனசு வச்சா, அமைச்சரை சுலபமா பார்த்துடலாம் பா...'' என, கடைசி தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''நம்ம முதல்வரின், 'குட் புக்'ல இருக்கிற, 'தங்க'மான அமைச்சர் அவர்... மற்ற அமைச்சர் களின் வீடுகளை விட இவர் வீட்டுல கூட்டம் அம்முது பா...

''இவரோட சென்னை வீட்டுல, தனக்கு வேண்டப்பட்ட ரெட்டையர்களை நியமிச்சு இருக்காரு... அமைச்சரை சந்திக்க வீட்டுக்கு வர்ற கட்சிக்காரங்க முதல் தொழிலதிபர்கள் வரை, இந்த ரெட்டையர்களை தான் முதல்ல சந்திக்கிறாங்க பா...

''அவங்க மனசு வெச்சா, அமைச்சரை சுலபமா சந்திச்சு காரியம் சாதிக்க முடியும்... அதுக்கான பலனும், ரெட்டையர்களுக்கு ரெட்டிப்பாவே கிடைச்சிடுது பா...'' என முடித்தார் அன்வர்பாய்.அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement