அதிமுக.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஏ மற்றும் பி என்ற இரு படிவங்களில் அதிமுக தலைமை சார்பில் கையெழுத்திட்டு சமர்பிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு நேற்று (ஜூன் 29) எழுதிய கடிதத்தில், ‛அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ, பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு' குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஓபிஎஸ்.,க்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எனவும், தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில், ‛கடந்த 2021 டிசம்பர் 1ல் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படவில்லை. அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லாது. உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜூன் 27 கடைசி நாள் முடிவுற்ற நிலையில், இத்தனை நாள் பொறுத்திருந்து, அதிமுக வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத கூட்டத்திற்கு தாங்கள் (ஓபிஎஸ்) உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டும் அந்த கூட்டத்தை புறக்கணித்துவிட்டு தற்போதைய தங்களின் கடிதம் ஏற்புடையதாக இல்லை.

திமுக.,வும், அதிமுக.,வும் பங்காளிகள்
இதற்கிடையே பழனிசாமியின் ஆதரவாளரும் எம்எல்ஏ.,வுமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். கட்சிக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது விதி. இங்கு பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று கட்சி தலைவரே நீதிமன்றத்திற்கு செல்கிறார். அதிமுக.,வை பொருத்தவரை ஒற்றை தலைமை வேண்டும் என நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். கட்சிக்கு தலைவராக இருந்தவர், மூன்று முறை முதல்வராக இருந்தவர், தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.தமிழகத்தை பொருத்தவரை அதிமுக, திமுக இரு கட்சிகளும் பங்காளிகள். எங்களுக்குள் பகைமை இருக்கும் ஆனால் வேறு கட்சிகள் உள்ளே நுழைய முடியாது. ஆனால் இந்த நிலைமையை நீர்த்துப்போக செய்யும் வேலைகளில் பன்னீர்செல்வம் இறங்கியுள்ளார். 50 ஆண்டு காலமாக பீடு நடை போட்டு வரும் அதிமுகவை 2026ல் தமிழகத்தில் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது; கட்சியை கபளீகரம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே எதிரிகள். கட்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பழனிச்சாமியின் அகங்காரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது...