Load Image
dinamalar telegram
Advertisement

அந்த சந்தோஷம்தாய்யா என் முதல் லாபம்...

Latest Tamil News
சென்னை காசிமேடு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த சாந்தியம்மாவிற்கு கடல்தான் தாய்,தோழி,துணை உறவு, உலகம் எல்லாம்... மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை கடற்கரையில் ஏலம் எடுத்து வியாபாரம் செய்யும் நுாற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளில் இவரும் ஒருவர்.
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து தொழிலுக்கு சென்று விடுவார் வருமானம் வருகிறதோ இல்லையோ வாரத்தில் ஏழு நாளும் கடற்கரையில் சாந்தியம்மாளை பார்க்கலாம் .குடும்பம்,விசேஷம்,சந்தோஷம், துக்கம் எல்லாம் காசிமேடு எல்லைக்குள்தான் இவர் காசிமேட்டைத் தாண்டிச் சென்றது ரொம்பவே அபூர்வம்.Latest Tamil Newsஅதே போல அரசாங்கத்தின் எவ்வித சலுகையையும் அனுபவித்தது மட்டுமில்லை அதுபற்றி வருத்தமும்படாதவர் உடம்புலயும் மனசுலயும் உறுதி இருக்கிறவரை உழைச்சு சாப்பிடுவோம் அதுதான் ஒட்டும் என்று சொல்லும் கடுமையான உழைப்பாளி இவர்.
மீன் இருப்பை பொறுத்து காலை பத்து மணிவரை இருந்து வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்புவார், அதன்பிறகு குடும்பத் தலைவியாகி வீட்டில் உள்ளவர்களை கவனித்து முடிக்க, இரவு விரைந்து வந்துவிடும், களைத்துப் போய் படுத்தது போல் இருக்கும் ஆனால் அதிகாலை வந்துவிட மீன் கூடையை எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடையை கட்டிவிடுவார்...
ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் வேலை அதிகம் என்றாலும் அன்றுதான் வியாபாரமும் அதிகம், கையில் விழும் காசு களைப்பை போக்கிவிடும்,மற்ற நாட்களில் படும் கடனைத்தீர்த்துவிடும் என்கிறார் சிரித்துக் கொண்டே.
மற்றவர்கள் எப்படியோ சாந்தியம்மாவைப் பொறுத்தவரை குறைந்த லாபத்திற்கே மீன் விற்கிறார், நல்ல மீன்களை மக்கள் வாங்கிச் சென்று சந்தோஷமாக சாப்பிடும் போது என்னை நினைத்துக் கொள்வர், அவர்கள் சந்தோஷம்தாய்யா எனக்கு முதல் லாபம் என்கிறார்.
ஏப்ரல் 15 ம்தேதி முதல் ஜூன் 14 ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்ககாலம் என்பதால், அப்போது மீன்பிடி தடைக்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் ஆழ்கடலில் சென்று விசைப்படகுகள் மீன் பிடிப்பதி்லை, சிறிய பைபர் மற்றும் கட்டுமரங்களில் கடலோரமாக சென்று பிடித்துவரும் மீன்கள்தான் விற்கப்படும்.
இந்த காலகட்டத்தில் கடலை நம்பியுள்ள சாந்தியம்மாள் உள்பட்டோருக்கு வியாபாரம் டல்லடிக்கும் ஆனால் அதற்காக வருத்தம் கிடையாது சுரண்டி எடுத்தால் கடலில் என்ன இருக்கும் ஆகவே கடல் வளம் பெருக இந்த தடைக்காலம் தேவைதான் என்பவர், வருடம் முழுவதும் மீன் கிடைக்காமல் கஷ்டப்படுவதை விட வருடத்தில் சில நாள் மட்டும் மீன் பிடிக்காமல் இருப்பது எவ்வளவோ மேல்தானே அப்பத்தானே கடலம்மாவும் வஞ்சிரம், வவ்வால், கொடுவா, சங்கரா, இறால், கடமா, நண்டு என்று அள்ளிக்கொடுப்பா என்று எதார்த்தம் பேசுகிறார்.
இதோ ஜூன் 14ம் தேதி முடிந்து விசைப்படகுகள் அனைத்தும் கடலுக்குள் அணிவகுத்து சென்று திரும்பிய நிலையில் சாந்தியம்மா சொன்னது போல கடலன்னை தங்களை மதித்து மீனவர்களை தானும் மதித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலின் பிரதான செல்வமான மீன்களை அள்ளித்தந்துள்ளதால் தற்போது சாந்தியம்மா உள்ளீட்டோர் சந்தோஷமாக உள்ளனர்.
-எல்.முருகராஜ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (4)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    மிக்க மகிழ்ச்சி

Advertisement