புதுடில்லி: குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கி கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக படித்து பார்த்தேன். தீர்ப்பில் தீஸ்டா செடல்வத் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் தான் கலவரம் குறித்து தவறான தகவலை போலீசாரிடம் தெரிவித்தது. இந்த தொண்டு நிறுவனம் தான் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் பா.ஜ., தொண்டர்களை தொடர்புப்படுத்தி மீது புகார் அளித்தது. மீடியாக்களின் அழுத்தம் காரணமாக, ஒவ்வொரு மனுவும் உண்மை என நம்பினார்கள்.
மக்களின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் அனைவரையும் பார்க்கின்றனர். நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கு 260 கோடி கண்கள், காதுகள் உள்ளன. அனைத்தையும் பார்க்கிறார்கள். கேட்கிறார்கள். கடந்த 2-0 ஆண்டில் குஜராத்தில் தோல்வியை சந்தித்தது கிடையாது. பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

குஜராத் கலவரம் தொடர்பாக, தொண்டு நிறுவனத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அதிகாரிகளையம் நியமித்தது. அதில், எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. விசாரணை அதிகாரிகளும் உள்ளூர் ஆட்கள் அல்ல. அவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தது. இந்த விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்தது. தொண்டு நிறுவனம் சார்பில், அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் ஆஜரானார்கள். அப்படியிருக்கையில் நாங்கள் எப்படி தலையிட முடியும்.
கலவரத்தின் போது, குஜராத் அரசு எந்தவித தாமதத்தையும் செய்யவில்லை. குஜராத்தில் பந்த் அறிவிக்கப்பட்ட போது, நாங்கள் உதவிக்கு ராணுவத்தை அழைத்தோம். ராணுவம் வந்து சேர கால அவகாசம் உண்டு. குஜராத் அரசின் சார்பில் எந்த தாமதமும் இல்லை. இதனை நீதிமன்றம் பாராட்டி உள்ளது.ராணுவ தலைமையகம் டில்லியில் உள்ளது. கடந்த 1984 ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். முதல் மூன்று நாட்களில் எதுவும் செய்யவில்லை. அதனை விசாரிக்க எத்தனை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தோம்.

குஜராத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த எனக்கு, பிரதமர் மோடி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது தெரியும். தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். அதில் 900 பேர் உயிரிழந்தனர். கலவர சூழ்நிலையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி கில், மோடி அரசுக்கு உதவினார். மாநில அரசின் முறையான நடுநிலையான நடவடிக்கையை எனது பணிநாட்களில் பார்த்தது இல்லை என என்னிடம் அவர் கூறினார். ஆனால், அவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
2001 முதல் 2014 வரை குஜராத் முதல்வராக இருந்த மோடியை கலவரத்தில் தொடர்புபடுத்த தொண்டு நிறுவனத்திற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு உதவி செய்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை மாநில அரசு பாதுகாத்தது. கலவரத்தை கட்டுப்படுத்த பல கூட்டங்களை மோடி நடத்தியுள்ளார். அமைதியாக இருக்கும்படி மக்களிடம் கோரிக்கை விடுத்தார் என கூறப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு எடுத்தது. சரியான நடவடிக்கையை சரியான நேரத்தில் செய்தோம். குறைந்த பாதிப்புடன் சூழ்நிலையை மாநில அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது என நீதிமன்றம் பாராட்டி உள்ளது. சில சமூக விரோதிகள், அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது. பா.ஜ., அரசு மீதான கரை துடைத்தெரியப்பட்டுள்ளது.
மோடிக்கு எதிராக அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த உச்சநீதிமன்றம், ஏன் குற்றம்சாட்டப்பட்டது என கேள்வி எழுப்பியது. அரசியல் ரீதியாக வழக்கு புனையப்பட்டது என்பது நிரூபணம் ஆகியது. இது கடந்த 19 ஆண்டுகளாக நடந்த போராட்டம். கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கி கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினார். ஆனால், நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு உண்மை வெளியே வந்தது தான் எங்களது வெற்றி. அது தங்கத்தை விட மின்னியது. மோடி மீது குற்றச்சாட்டுகளை கூறியவர்கள், இன்று உயிருடன் இருந்தால், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் மோடியிடமும், பா.ஜ.,விடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையின் பக்கம் இருந்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மோடி, வலியை சகித்து கொள்வை உன்னிப்பாக கவனித்திருக்கிறேன். நீதித்துறை நடவடிக்கைகள் நடந்து கொண்டுள்ளதால் அவர் பேசவில்லை. வலிமையான மனம் உள்ளவர் மட்டுமே இத செய்ய முடியும். நீதித்துறை நடவடிக்கைகள் முடியும் வரை மோடி எதுவும் கூறாமல், அதில் தலையிடாமல் இருந்தார். அனைத்தையும் அமைதியாக தாங்கினார். இன்று உண்மை வென்றுள்ளது. மோடி வெற்றி பெற்றுள்ளார்.
கலவரத்தில் மாநில அரசும், முதல்வரும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. கலவரம் நடக்கவில்லை என யாரும் மறுக்கவில்லை. நாட்டின் பல பகுதிகளிலும் கலவரம் நடந்தது. பா.ஜ.,வின் அரசியல் எதிரிகள், தங்களது கொள்கையை பரப்ப அரசியலுக்கு வந்துள்ள பத்திரிகையாளர்கள், சில தொண்டு நிறுவனங்கள் இணைந்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர். பொய்யை கூட உண்மை என நம்ப வைக்கும் திறன் அவர்களிடம் உள்ளது. மீடியாக்களின் செயல்பாட்டில் பா.ஜ., தலையிட்டது இல்லை. அது எங்களின் செயல்பாடு இல்லை.தற்போதும், கடந்த காலங்களிலும் அவ்வாறு செய்தது இல்லை.
தற்போது நீதிமன்றம் மட்டும் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கவில்லை. நானாவதி கமிஷனும் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது. ஜனநாயகத்தில், அரசியலமைப்பை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி சிறந்த உதாரணமாக உள்ளார். மோடியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், ஒருவரும் போராடவில்லை. நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு தெரிவித்து தொண்டர்கள் ஒன்று சேரவில்லை. நாங்கள் சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து நடந்தோம். நானும் கைது செய்யப்பட்டேன். அப்போதும் நாங்கள் போராட்டம் நடத்தவில்லை.
சிறப்பு விசாரணை குழு ஆஜராகும்போது மோடி நாடகம் ஏதும் நடத்தவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஆதரவு கேட்கவில்லை. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைத்து தர்ணா நடத்த உத்தரவிடவில்லை. நீதித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உள்ளது. முதல்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்க மோடி தயாராக இருந்தார். போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? சட்டத்தை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. நீதித்துறைக்கு எதிராக போராட்டம் நடத்துவதை யாரும் நியாயப்படுத்த முடியாது. நான் கைது செய்யப்பட்ட போது, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தேன். பின்னர் நீதிமன்றம், என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. என்னை சிக்க வைக்க அரசியல் ரீதியாக வழக்கு புனையப்பட்டது எனக்கூறியது. இது எனது கூற்றை உண்மை என நிரூபித்தது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (29)
சிவபெருமானாவது ஒரேயொரு முறைதான் நஞ்சை உண்டார். நமது மோடி பெருமான், தினம் தினம் நஞ்சை உண்கிறார். தினம் தினம் எதிர்க்கட்சியினர் அவர் மீது பொய்குற்றம் எனும் நஞ்சை வீசுகின்றனர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நமது நவீன சிவபெருமான், எதிர்க்கட்சியினர் வீசும் நஞ்சை பிடித்து தினம் தினம் உண்கிறார். மோடியை அழிக்க நினைத்தவர்களெல்லாம் இன்று மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போதைய நீதி,நியாயத்தையெல்லாம் நினைத்து, அதே நஞ்சை உண்டதுபோல, நாங்களும் இதை தாங்கிக்கொண்டோம்....
நம் நாட்டின் ஊடகங்கள் திரும்ப, திரும்ப இந அழிப்பை கலவரமென்று ஆட்சியிலாளர்கள் கூறுவதை வெளியிட்டு கொண்டிருக்கின்றார். கலவரம் என்றால் இரண்டு பக்கமும் பாதிப்பு வர வேண்டும் என்பது நியதி, அரசு பயங்கரவாதத்தில் பாதிப்பு ஒருபக்கம் தான் இருக்கும் என்பதை சீனா, ரோஹிங்கிய, ஸ்ரீலங்கா, ஹிட்லரின் ஜெர்மனி என்று உலகம் பல நிலைகளில் ஊர்ஜீதப்படுத்தி இருக்கு. மத சிந்தனை இல்லாமல் விசாரணை நடந்தால் நீதி வெற்றிபெறும். அரசு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டு செயல் படுவதுதான் மனித பண்பாடுள்ளதாக இருக்கும்.
கவ்ஸர் பொய்யை தாங்கிலிகொள்ளவிலை. பொய்தான் அவரை இன்றுவரை தாங்கி பிடிக்கிறது.
முன்பு ராமர் என்றார்கள். பிறகு என்னென்னவோ சொன்னார்கள். இப்போ சிவனின் பெயரை சொல்லுறாங்க. சிவன் சொத்து சர்வ நாசம் என்று சொல்லுவாங்க, சிவன் ஒருவனே, அவரின் பெயரை சொல்லி அமித்ஷா மோடிஜிக்கு தீராத பாவத்தை தேடவேண்டாம், நித்தியானந்தா நானே சிவன் என்று சொல்லி ஏமாற்றினார், இப்போ பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். சிவன் உருத்திர தாண்டவம் ஆடினால் தங்க முடியாது, சிவன் என்று சொன்னவர்கள் அழிந்து போனதாக புராணங்களில் படித்திருக்கிறோம், அரசியலுக்காக கடவுள் பெயரை பாவிக்க வேண்டாம்.