ADVERTISEMENT
தேனி,--நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.60 வழங்கினால்தான் கொள்முதல் செய்த பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கலெக்டர் ஆய்வு செய்து, லஞ்சம் பெறுவோரை கைது செய்ய பரிந்துரைக்க வேண்டும்' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தேனியில் கலெக்டர் முரளீதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ.,க்கள் சிந்து, கவுசல்யா, இணை இயக்குனர் அழகுநாகேந்திரன், நேர்முக உதவியாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.விவசாயிகள் பேசியதாவது: பாண்டியன், விவசாய சங்க செயலாளர்: அகமலை, முதுவாக்குடி, வருஷநாடு பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.கலெக்டர்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.சீனிராஜ், மாவட்டத் தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: ஆண்டிபட்டி ஒன்றியம் எம்.சுப்புலாபுரம் வண்ணான் ஊத்து ஓடையில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை தரமற்றதாக கட்டப்பட்டது. சம்மந்தப்பட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க முந்தைய கலெக்டரிடம் புகார் அளித்தேன். அவர் பரிந்துரை செய்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. விவசாயிகளின் புகார்களை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் வழங்குவதால் விவசாயிகள் மிரட்டப்படுகின்றனர் என்றார். இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்க வில்லை.சதீஸ்பாபு, மாவட்டத் தலைவர், பாரதீய கிசான் சங்கம்: மேலக்கூடலுாரில் விதிமுறைகளுக்கு மாறாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது. அங்கு 40 கிலோ நெல் மூடைக்கு ரூ.60 லஞ்சமாக வழங்கினால்தான் கொள்முதல் செய்யப்படும் நிலையால் உள்ளது. அங்கு லட்சக்கணக்கில் லஞ்சமாக பெறுகின்றனர்.கண்ணன்: லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து தவறு செய்வோரை கைது செய்யப்பட கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும். அப்போதுதான் நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.சரவணன்: தலைவர், பா.ஜ., மாவட்ட விவசாய அணி: பள்ளப்பட்டி மூல வைகையில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்க கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!