ADVERTISEMENT
இந்தியாவில் உள்ள சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வின் தாக்கம், இந்தாண்டு இறுதியில் தெரியவருமென மூத்த வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 30 சதவீத பங்களிப்பை குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வழங்குகின்றன. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 48 சதவீதமாக உள்ளது. மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறு,சிறு,நடுத்தர தொழில்கள் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
பேங்க் ஆப் பரோடா நடத்திய ஆய்வில், நடப்பு நிதியாண்டோடு சேர்த்து தொடர்ச்சியாக 3வது ஆண்டாக 303 குறு நிறுவனங்களின் விற்பனை, சரிவில் இருந்து வருகிறது. இது கோவிட் பாதிப்புக்கு முன்பும், சிறு,குறு நிறுவனங்களின் வளர்ச்சி சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதையே காட்டுகிறது என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கோவிட் பரவலால், மோசமான பாதிப்பை சந்தித்த சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் கடன் சீரமைப்பு மற்றும் புதிய கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும்,ஏற்கனவே சிறு நிறுவனங்கள் மோசமான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போதைய வட்டி விகித உயர்வு, கடனை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தும் திறனை குறைக்கும் என வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மூத்த வங்கியாளர்கள் கூறியுள்ளதாவது : -
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் பெற்ற கடன்களுக்கான தவணையை குறிப்பிட்ட நேரத்திலோ, அல்லது குறைந்தபட்ச தாமதத்துடன் திருப்பி செலுத்தி வருகின்றன. ஆனால், தொடர்ச்சியாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் அவர்கள் திரும்ப செலுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இ.சி.எல்.ஜி.எஸ் திட்டத்தின் கீழ் புதிதாக வங்கி கடன் பெற்ற சிறு, குறு நிறுவனங்களும், வட்டியை செலுத்த நேரிடும். சில இ.சி.எல்.ஜி.எஸ் கடனாளர்கள் திருப்பி செலுத்தும் காலம், கடந்த செப்டம்பரில் இருந்து துவங்கி விட்டது. இரண்டாவது கட்ட திருப்பி செலுத்தும் காலம், நடப்பாண்டு இறுதியில் துவங்க உள்ளது.
கொரோனா பரவலால் கடுமையாக தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து மீண்டு வர மத்திய அரசு அறிமுகம் செய்த இ.சி.எல்.ஜி.எஸ் திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டன. ஒரு வருடம் வரை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. கடன் தொகையை செப்டம்பரில் இருந்து திருப்பிச் செலுத்த தொடங்கிய நிலையில், எங்கள் அனுபவத்தில் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை. இருந்தபோதிலும், கடன்கள் அனைத்தும் இதுவரை கட்டுப்பாட்டில் உள்ளன.

சிறு,குறு தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, ரெபோ விகிதத்தில் ஏற்படும் உயர்வு, உடனடியாக வெளிப்புற அளவுக்கோல் அடிப்படையில் மாற்றப்படுவதால், வட்டிக்கான செலவு அதிகரிக்கும். எம்.சி.எல்.ஆர் (MCLR) அதாவது உள் அளவுக்கோல், விகித அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கின்றன. எனவே அதன் தாக்கம் எதிரொலிக்க சிறிது காலம் ஆகும்
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, வெளிப்புற அளவுக்கோல் அடிப்படையில் அனைத்து சிறு நிறுவன கடன்களில் 69 சதவீதம், மாறுதலுக்கு உட்படும் வரி விதிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களின் 20.4 சதவீதம் கடன்கள் மட்டுமே இதனடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சியில் பெரும் பகுதி பாதிக்கப்பட்டது. தற்போது, 90 புள்ளிகள் வரை வட்டி விகிதம் அதிகரித்திருப்பது, அவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!