Load Image
dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் நாமக்கல்

அன்னாசி பழம் சீசன் துவக்கம்
எருமப்பட்டி, ஜூன் 24-
நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா
தலமாக கொல்லிமலை உள்ளது. இந்த மலையில் சுவைமிக்க அன்னாசி, பாலாப்பழம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஆனி மாதம் துவங்கி ஆடி, ஆவணி ஆகிய. 3 மாதங்களில் அன்னாசி சீசன் உள்ள நிலையில், கடந்த வாரம் முதல், கொல்லிமலையில் அன்னாசி பழம் அறுவடை பணிகள் சூடுபிடித்துள்ளது. மலைப்பகுதியில் இருந்து மினி ஆட்டோக்களில் கொண்டு வரப்படும், இந்த அன்னாசி பழங்கள், நாமக்கல், எருமப்பட்டி, கரூர், துறையூர், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது சீசன் துவக்கம் என்பதால், ஒரு கிலோ, 50க்கு விற்பனை செய்யப்படும் அன்னாசசி பழங்கள், இரண்டு வாரங்களில் விலை குறையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். அன்னாசி பழம் சீசன் துவங்கியதால், மலைப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஸ் நுகர்வோருக்கு
28ல் குறைதீர் கூட்டம்
நாமக்கல், ஜூன் 24-
நாமக்கல் மாவட்ட அனைத்து காஸ் சிலிண்டர் நிறுவன முகவர்கள், காஸ் வினியோகஸ்தர்கள், நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், 'காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்' நாமக்கல் கலெகடர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், ஜூன் 28ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்று, எரிவாயு வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.
தொழிலாளி தற்கொலை
பள்ளிபாளையம், ஜூன் 24 -
பள்ளிபாளையம் அருகே டி.வி.எஸ்., மேடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 33, தறி தொழிலாளி, இன்னும் திருமணமாகவில்லை. பெற்றோர்கள் இல்லாததால், உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மதியம், 2:00 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நந்தகுமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் விபத்தில் மேஸ்திரி பலி
நாமக்கல், ஜூன் 24-
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி குடித்தெருவைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிகண்டன், 32. இவர் கடந்த, 21ம் தேதி வெண்ணந்துாரில் படித்து வரும் தனது மகன்களுக்கு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் வாங்க வெண்ணந்துார் சென்றார். பின், பைக்கில் நாமக்கல் வழியாக, கரூர் சென்று கொண்டு இருந்தார். நாமக்கல்-மோகனுார் சாலை, ஐயப்பன் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும், மணிகண்டன் ஓட்டிசென்ற பைக்கும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டன. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் கைது
குமாரபாளையம், ஜூன் 24-
-குமாரபாளையம் சுற்றியுள்ள பல இடங்களில் மது குடிக்க அனுமதிப்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கோட்டைமேடு பகுதியில் பெட்டிக்கடை அருகில் கிருஷ்ணன், 35, வட்டமலை ஓட்டல் கடையில் மது குடிக்க அனுமதித்த இளங்கோ, 46, ஆகிய இருவரையும் எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
பெண் வக்கீல்
தற்கொலை
மோகனுார், ஜூன் 24-
மோகனுார் அடுத்த வளையபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி நித்யா, 35. இவர்களுக்கு, 2014ம் ஆண்டு திருமணமாகி, டேனிஸ், 7, தயானி, 4, என, இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் மோகனுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் வக்கீலாக உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த நித்யா, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும்
பள்ளிபாளையம், ஜூன் 24-
பள்ளிபாளையத்தில் முட்புதர் வளர்ந்துள்ள பாசன வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், பத்து கி.மீட்டர் சுற்றுளவுக்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது. ஆண்டுதோறும் ஆகஸ்டில் பாசனத்திற்கு தண்ணீர் இதில் செல்லும். இந்த வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்வர். தற்போது மேட்டூர் அணையில் வாய்க்கால் பாசனத்திற்கு திறக்குமளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் தொடர் மழையால், அணைக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டு உள்ளதால், முன்கூட்டியே வாயக்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பள்ளிபாளையத்தில் வாய்க்காலின் பெரும்பாலான பகுதியில் முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. பாசனத்திற்கு தண்ணீர் வரும்போது, இதனால் தண்ணீர் கடைமடை வரை செல்ல தடை ஏற்படும். எனவே முன்கூட்டியே, இவற்றை அகற்றி, பராமரிப்பு செய்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குவாரிகள் ஆய்வு: மக்கள் கோரிக்கை
ப.வேலுார், ஜூன் 24-
பரமத்தி பகுதியில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பரமத்தி யூனியன் பகுதிகளில் உள்ள நல்லுார், குன்னமலை, மணியனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து, அரளைக்கல், சம்பட்டி கற்கள், கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த கற்களை பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி, அங்கு பல்வேறு ரகமான கிரானைட் கற்கள் தயார் செய்யப்பட்டு, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில், அரசு அனுமதிக்கப்பட்டுள்ள ஆழத்திற்கு அதிகமாக, பல கல்குவாரிகள் செயல்படுவதாகவும், மேலும், அனுமதி பெறாமலும் கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகளையும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து, கல்குவாரியின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை சோதனை செய்ய வேண்டும். கல்குவாரிகளுக்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும், அனுமதி வழங்கப்பட்டு காலாவதியாகி விட்டதா என்றும் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement