Load Image
dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

மூன்று டன் ரேசன் அரிசி
பறிமுதல்: டிரைவர் கைது
நம்பியூர் ஜூன் 24-
நம்பியூர் அருகே மூன்று டன் ரேசன் அரிசி கடத்திய, இரு வாகனங்களை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நம்பியூர் அருகே ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நின்ற ஒரு ஆம்னி வேனில், 50 கிலோ எடையில், 20 மூட்டைகளில் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது. இது தொடர்பாக நம்பியூர், நாடார் வீதியை சேர்ந்த பிரசாந்த், 26, என்பவரை கைது செய்தனர். அதே பகுதியில் கேட்பாரற்று நின்ற, மகேந்திரா பிக் அப் சரக்கு ஆட்டோவில், இரண்டு டன் ரேசன் அரிசி இருந்தது. ஆனால், வாகனத்தின் டிரைவர் மாயமாகி விட்டார். மூன்று டன் ரேசன் அரிசி, சிக்கிய டிரைவரை, ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருமணமான மூன்று நாளில்
புது மாப்பிள்ளை தற்கொலை
சென்னிமலை, ஜூன் 24-
சென்னிமலை அருகே, திருமணமான மூன்று நாளில், புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்துறை ஆர்.எஸ்., அருகிலுள்ள கொம்மக்கோவிலை சேர்ந்தவர் குமார், 32; மதுரை, திருபுவனத்தை சேர்ந்தவர் கவிதா. இருவருக்கும் கடந்த, 19ம் தேதி சென்னிமலை அருகே முத்தையன்கோவிலில் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை புதுமண தம்பதி பெருந்துறைக்கு பைக்கில் சென்றனர்.
மதியம், 2:30 மணியளவில் குமார் மட்டும் வீட்டுக்கு திரும்பினார். கவிதா வராதது குறித்து உறவினர்கள் கேள்வி கேட்டபோது, விஷம் குடித்து விட்டு குமார் வந்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பெருந்துறையில் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, குமார் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்படி வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலவச ஆடுகள் வழங்க
1,400 பயனாளிகள் தேர்வு
ஈரோடு, ஜூன் 24-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைத்துறை சார்பில், 1,400 பேருக்கு ஆடுகள் வழங்க
பயனாளிகள் தேர்வு நிறைவடைந்தது.
கால்நடை துறை சார்பில், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக கறவை மாடு, ஆடு, கோழி போன்றவை முழு அளவு மானியத்திலும், பகுதியாக மானியத்திலும் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில், 1,400 பேருக்கு ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது: மாவட்டத்தில், 14 யூனியனிலும் தலா, 100 பயனாளிகளுக்கு தலா ஒரு யூனிட் ஆடுகள் வழங்க அரசு அறிவித்தது. ஒரு யூனிட் என்பது, நான்கு பெட்டை ஆடுகள், ஒரு கிடா ஆகும்.
கடந்தாண்டுகளில் இதுபோன்ற நலத்திட்டங்களில் பயன் பெறாத, மேய்ச்சல் ஆடு வளர்க்கும் இட வசதி உள்ள பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அமைச்சர் முத்துசாமி மூலம், பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் கடை முன் வாலிபர் சடலம் மீட்பு
ஈரோடு, ஜூன் 24-
கருங்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை முன், வாலிபர் நேற்று மாலை இறந்து கிடந்தார்.
ஈரோடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனியில், வேப்பமரத்து டாஸ்மாக் கடை உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருப்பதால் கடையை அகற்ற, பல்வேறு அரசியல் கட்சியினர், மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை டாஸ்மாக் கடை முன், கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்த கண்ணையன் மகனான கட்டட தொழிலாளி மூர்த்தி, 38, இறந்து கிடந்தார். கொலையாக இருக்கலாம் என்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூர்த்திக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். மூர்த்திக்கு தீவிர மது பழக்கம் இருந்தது.
குடும்ப பிரச்னையால் மனைவி அவரை பிரிந்து, தாய் வீடான வெள்ளகோவிலுக்கு பல மாதங்களுக்கு முன் சென்று விட்டார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், மூர்த்தி இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே, மூர்த்தி இறப்புக்கான காரணம் தெரிய வரும்.
ஈக்களால் தொல்லை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாராபுரம், ஜூன் 24-
தாராபுரத்தை அடுத்த சின்னப்புத்துார் அருகே கோழிப்பண்ணை உள்ளது. பண்ணை கழிவுகளால், பெருகும் ஈக்கள், சுற்று வட்டார பகுதிகளில் மக்களை அவஸ்தைக்கு உள்ளாக்கி வந்தது. இதனால், தனியார் கோழிப்பண்ணையை அகற்றுமாறு, மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, சின்னப்புதுார் ஊராட்சி அலுவலகம் முன், 15க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோழிப்பண்ணையை அகற்றி, சுகாதார கேட்டை போக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement