பெண் கொலை வழக்கில் 2வது கணவனுக்கு ஆயுள்
கோவை : மனைவியை கொன்ற வழக்கில், இரண்டாவது கணவனுக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன்,37. இவர், பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்திலுள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். அப்போது, பாண்டியராஜனுக்கும், ஏற்கனவே திருமணமான கலாமணி, 36, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால், கலாமணியை, சொந்த ஊரான ஜெயமங்கலம் அழைத்து சென்று, அங்குள்ள கோவிலில் திருமணம் செய்தார்.
கோவை வந்த அவர்கள், தொண்டாமுத்துார் வ.உ.சி., வீதியில் வாடகை வீட்டில் வசித்தனர். பாண்டியராஜன் அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்தார். கலாமணி கட்டட வேலைக்கு சென்றார். இருவருக்கும் தினசரி மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.கடந்தாண்டு, ஜூலை 8ல், இருவரும் மது குடித்தனர். மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. பாண்டியராஜன் ஆத்திரமடைந்து, கலாமணி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பினார்.
தொண்டாமுத்துார் போலீசார் விசாரித்து, பாண்டியராஜனை கைது செய்து, கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட பாண்டியராஜனுக்கு ஆயுள் சிறை, ரூ. 2,500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!