சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒருங்கிணைந்த சேவை மையம்
சென்னை : பத்திரப்பதிவு தொடர்பான முன் தயாரிப்பு பணிகள், விண்ணப்பங்கள் பதிவு செய்வது உள்ளிட்டவற்றுக்காக, சார் பதிவாளர் அலுவலகங்களில், ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள் 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதில், வில்லங்க சான்று, பிரதி ஆவணம் பெறுதல், திருமண பதிவு, நிறுவன பதிவு பணிகளுக்கு, மக்கள் ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, மக்கள் ஆவண எழுத்தர்களையே நாட வேண்டிள்ளது.பெரும்பாலான இடங்களில், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களையே மக்கள் அணுக வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், சில இடங்களில் உரிமம் இல்லாத ஆவண எழுத்தர்களால், பதிவுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன.
இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆவண எழுத்தர் அலுவலகத்தில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும், ஒருங்கிணைந்த முறையில் சார் பதிவாளர் அலுவலகங்களிலேயே வழங்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.நிலங்களின் வழிகாட்டி மதிப்பு விபரங்கள் அறிதல், வில்லங்க சான்று பெற விண்ணப்பித்தல், பதிவுக்கான பத்திரங்களின் முன் தயாரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக, சென்னை, கோவையில் குறிப்பிட்ட சில சார் பதிவாளர் அலுவலகங்களில், இத்தகைய ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கான வடிவமைப்பு, செயல்முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் சேவை மையங்கள் அமையும் இடங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிச்சயம் இதற்கும் கட்டிங் கேட்பார்கள். பதிவு பெற்ற ஆவண எழுத்தர்கள் வாயில் மண்ணைப்போட்டு, இவர்களே கல்லா கட்டுவார்கள்.