டெக்ஸ்பேர் 2022 ஜவுளி இயந்திர கண்காட்சி இன்று துவக்கம்
கோவை, : கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், நான்கு நாட்கள் நடக்கும் ஜவுளி இயந்திர கண்காட்சி, 'டெக்ஸ்பேர் 2022' இன்று துவங்குகிறது.சைமா தலைவர் ரவிசாம் கூறியுள்ளதாவது:தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), சர்வதேச அளவிலான ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் கண்காட்சியை நடத்தி வருகிறது.
13வது பதிப்பான இந்த ஆண்டு, கண்காட்சி இன்று துவங்குகிறது. 220 ஜவுளி இயந்திரங்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், 295 அரங்குகளில் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.இன்று துவங்கும் இந்த கண்காட்சி, வரும் 27ல் நிறைவு பெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஜப்பான், சுவிட்சர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.கண்காட்சியை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நாளை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து நடக்கும் கூட்டத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன், மாநில மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.டெக்ஸ்பேர் 2022 கண்காட்சி, ஜவுளித்துறையில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கண்காட்சியை காண வருவோருக்கு, அனுமதி இலவசம். இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் பார்வையிடுவர் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!