Load Image
dinamalar telegram
Advertisement

டெங்கு பரவல் இல்லை... இருந்தாலும் உஷார்!


திருப்பூர் : 'ஏடிஸ்' கொசுக்கள் நம்மை கடிக்கும் போது, டெங்கு உண்டாகிறது. இவை பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.திடீரென கடுமையான காய்ச்சல், அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாத நிலை, கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவது டெங்கு அறிகுறிகள். இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான எலும்பு வலி ஏற்படும்.சுகாதாரத்துறையினர் கூறுகையில்,

'துவக்கத்திலே கண்டறிந்து, சிகிச்சை முறைகளுக்கு தயாராகினால், ஏழு நாட்களில் டெங்கு சரியாகிவிடும்.கண்காணிக்காமல் விட்டால், டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதற்கு உதவக்கூடியவை. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படும்.டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை.



நாம் வசிக்கும் வாழ்விடங்களில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. லார்வா, கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீடு, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும்.குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்த வேண்டும்,' என்றனர்.நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் டெங்கு பாதிப்பு நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு அதிகரித்த போதும், ''திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை'' என்கிறார், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார்.


அவர் மேலும் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள, 15 பேரூராட்சி தலா இருபது பேர் வீதம், 300 பேரும், 11 ஒன்றியங்களில் தலா, பத்து பேர் வீதம், 110 பேர் என மொத்தம், 410 பேர் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஏதேனும் ஒரு பகுதியில் டெங்கு அறிகுறியுடன் யாரெனும் அனுமதியாகினால், அப்பகுதியில் உடனே கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரம், துாய்மை பணி குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.பொதுமக்கள் முடிந்தவரை குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்ட பின்பும், மூன்று நாட்களுக்கு காய்ச்சல் தொடர்ந்து, டாக்டரை சந்தித்து அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,' என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement