சாலை அமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்
திருப்பூர் : புதிய ரோடு போடும் பணிக்காக காட்டுவளவு பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய ரோடுகள், வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் 51வது வார்டுக்கு உட்பட்ட காட்டுவளவு பிரதான ரோட்டில் புதிய ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு 60 அடி அகலத்தில் தற்போது திட்டச் சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக இந்த ரோட்டில் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.ரோடு போடும் பணி துவங்கவுள்ள நிலையில், நேற்று காலை வரை இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியைத் துவங்கினர்.
ரோட்டை ஒட்டி அமைத்திருந்த ெஷட்கள், பந்தல்கள், திண்ணை, சுற்றுச் சுவர் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணி துவங்கியது. இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றும் பணி துவங்கிய சிறிது நேரத்திலேயே மற்றவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர்.முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் இன்று முதல் ரோடு போடும் பணி துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதியில் நேற்று காலை முதல் நீண்ட நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!