நிலம் அளவீடு கோரி குடும்பத்தினர் தர்ணா
பல்லடம், : பல்லடம் அருகே, நாரணாபுரத்தை சேர்ந்தவர் நல்லமுத்து; இவரது மனைவி ராஜம்மாள், 62. நிலத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி, ராஜம்மாள் நேற்று குடும்பத்துடன் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.ராஜம்மாள் கூறுகையில், 'எங்கள் வீட்டின் அருகே வசித்து வரும் சிலர், அரசு புறம்போக்கு நிலத்தில் அரசாணைப்படி கொடுக்கப்பட்ட அளவுகளை மீறி ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசிக்கின்றனர்.
இதுகுறித்து கேட்டால் தேவையற்ற வாக்குவாதம், தகராறு ஏற்படுகிறது. எனவே, எங்கள் நிலம் உட்பட, அருகிலுள்ளவர்களின் நிலத்தையும் அளந்து, அவரவருக்கு பாத்தியப்பட்ட இடங்களை மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.ராஜம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த் துறை அதிகாரிகள், அளவீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து வீட்டுக்கு திரும்பிய ராஜம்மாள் குடும்பத்தினருக்கும், அருகிலுள்ளவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ராஜம்மாள் மகள் சத்யா, 37, கண்ணன் மனைவி அய்யம்மாள், 38 ஆகிய இருவரும் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!