இ -சேவை மையங்களில் டி.ஆர்.ஓ., ஆய்வு; ஊழியர்களுக்கு எச்சரிக்கை
விழுப்புரம், : விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் திடீர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சாதிசான்று, வருவாய் சான்று உள்ளிட்ட வருவாய் துறை வழங்கும் சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கவும், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல பணிகள் தொடர்பாகவும் தினந்தோறும் மக்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி இ-சேவை மைய ஊழியர்கள், மக்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக, வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும் புகார்கள் வந்தன.அதன் பேரில், நேற்று தாலுகா அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் திடீர் ஆய்வு செய்தார்.வரிசையில் காத்திருந்த மக்களிடம் விண்ணப்ப கட்டணம் எவ்வளவு பெறப்படுகிறது, நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகிறீர்களா ஆகிய விபரங்களை கேட்டார்.
பின், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சான்றிதழுக்காக விண்ணப்பிக்க வரும் மக்களை நீண்டநேரம் காத்திருக்க வைக்காமல் விரைந்து விண்ணப்பித்து அனுப்ப வேண்டும். மக்களிடம் பணிவோடு நடந்து கொள்ள வேண்டுமென, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் அறிவுறுத்தினார். மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!