Load Image
dinamalar telegram
Advertisement

உருளைக்கிழங்கு வரத்து சரிவு; விலை உயர்வு: உயரத்தில் உருளைக்கிழங்கு விலை

மேட்டுப்பாளையம் : பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவை அதிகரித்து இருப்பதாலும், வரத்து குறைந்துள்ளதாலும் ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.


மேட்டுப்பாளையத்தில், 75க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், கோலார், குஜராத், ஆக்ரா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.மண்டிகளில், உருளைக்கிழங்கை தரம்பிரித்து, ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகின்றனர்.தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில், கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.


தற்போது ஊட்டி கிழங்கு அறுவடை நடைபெறுகிறது. விவசாயிகள் கிழங்குகளை அறுவடை செய்து மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, ஊட்டி கிழங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலாளர் ரங்கசாமி கூறியதாவது:மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளுக்கு, நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், உருளைக்கிழங்குகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதில் ஊட்டி உருளைக்கிழங்கு கெட்டித் தன்மையும், நல்ல சுவையாக உள்ளது. வீடுகளில் நான்கைந்து நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தாலும், அழுகாமல் உள்ளது.


இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும், ஊட்டி கிழங்கை விரும்பிவாங்குகின்றனர். நீலகிரி மாவட்டத்தில், தற்போது ஊட்டி உருளை கிழங்கு அறுவடை நடைபெறுகிறது. பருவமழை சரியாக பெய்யாததால், உருளைக்கிழங்கு பயிர் செய்யும் பரப்பு குறைந்துள்ளது.இதனால் விற்பனைக்கு வரும் கிழங்கின் அளவும் குறைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் இருந்து, 150 லிருந்து, 200 டன் கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கிழங்கின் தேவை அதிகரிப்பதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் விலை உயர்ந்துள்ளது.


மண்டிகளில், 45 கிலோ உருளைக்கிழங்கு மூட்டை, குறைந்தபட்சம், 1,400 லிருந்து, அதிகபட்சம் தரமான கிழங்கு, 2,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.இதேபோன்று கோலார் கிழங்கு குறைந்த பட்சம், 1,200 லிருந்து, அதிகபட்சம், 1,300 வரையும், குஜராத், ஆக்ரா ஆகிய மாநில கிழங்குகள் குறைந்தபட்சம், 1,050 லிருந்து, அதிகபட்சம்,1,150 ரூபாய் வரைவிற்பனையாகிறது.


ஊட்டி கிழங்கு அறுவடை சீசன், ஜூலை இரண்டாவது வாரம் வரை இருக்கும். கிழங்கு வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement