Load Image
dinamalar telegram
Advertisement

வளர்ப்பு யானைகளை காப்பதும் எங்கள் கடமை:வன அலுவலர் குருசாமி தபாலா பேட்டி

மதுரை,-'காட்டு யானைகள் மட்டுமல்ல வளர்ப்பு யானைகளையும் பாதுகாப்பது வனத்துறையின் கடமையே. அந்த வகையில் மதுரையில் வனம், வன விலங்குளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்' என்கிறார் மதுரை மாவட்ட வனஅலுவலர் குருசாமி தபாலா.அவர் நமக்கு அளித்த பேட்டி...

வளர்ப்பு யானைகள் மீது திடீரென தீவிர கண்காணிப்பு ஏன்
திடீர் கண்காணிப்பு எதுவுமில்லை. தமிழக அரசின் வளர்ப்பு யானை சட்டத்தில் உள்ளதை பின்பற்றுகிறோம்.யானையை வளர்க்க தேவையான பொருளாதார வசதி வளர்ப்பவர்களுக்கு உள்ளதா, வளர்க்க பாகன், பராமரிக்க காவடி(பராமரிப்பாளர்) உள்ளனரா என பார்க்கிறோம். சிலர் விதி மீறுவதால் கூடுதல்கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.

யானையை வேறு இடம் கொண்டு செல்ல அனுமதி தேவையா
யானை வளர்க்கும் இடம் சுத்தமாகவும், கால்கள் பாதிக்காத தரைத்தளமும்இருக்க வேண்டும். அரசு அங்கீகரித்த கால்நடை டாக்டர்களால் முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.வளர்ப்பு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி, வளர்ப்பு உரிமம் வழங்க, புதுப்பிக்க தலைமை வன விலங்கு காப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

பார்வை குறைந்தும் மீனாட்சி கோயில் யானை பணியில் இருப்பது
மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம், அழகர்கோவிலில் தலா 3 யானைகள் உள்ளன. 4 தனியார் யானைகளில் ஒன்றை திருச்சி எம்.ஆர்.பாளையம் முகாமிற்கு அனுப்பிவிட்டோம். மீனாட்சி அம்மன் கோயில் யானையை சிறப்பு கால்நடை குழு தொடர்ந்து கண்காணிக்கிறது. பார்வை குறைந்தும் பணியில் இருப்பது குறித்து கால்நடை டாக்டர்கள் தான் தெரிவிக்க வேண்டும். மற்றபடி யானை இயல்பாக, நலமாக உள்ளது.

மதுரையில் வனவிலங்கு வேட்டை தடுப்பு நடவடிக்கை எடுக்கிறீர்களா
மதுரையில் அரிய வகை பறவைகள், காட்டு முயல்கள் வேட்டையாடுவதை தடுத்துள்ளோம். கடந்த மாதங்களில் 10 வேட்டை வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். அபராதமும்விதித்துள்ளோம். வேட்டை நடக்கும் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மதுரையில் வன பாதுகாப்பு குழுக்கள் இருந்ததே என்ன ஆனது
வனச்சரகர்கள் தலைமையில் வனப்பகுதி விவசாயிகள், மக்கள் அடங்கிய வன பாதுகாப்பு குழு மீண்டும் உருவாக்கப்படும். முதற்கட்டமாக உசிலம்பட்டியில் ஒரு குழு உருவாக்கியுள்ளோம். வனம் காக்கும்குழுக்களுக்கு கடன் உதவி செய்கிறோம். கடன் தொகையை தாமதமின்றி திருப்பி தருபவர்களுக்கு மீண்டும் வழங்குவோம்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குட்லாம்பட்டி அருவி
குட்லாடம்பட்டி அருவி பகுதியை சீரமைக்க திட்டமிட்டுள்ளோம். அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடரும். இங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டமும் செயல்படுத்தப்படும். சீரமைப்பு பணி முடியும் வரை அருவிக்குசெல்ல மக்களுக்கு அனுமதியில்லை.

வனத்துறையின் சார்பில் வனவிலங்கு மீட்பாளர்கள் உள்ளனரா
குரங்கு, காட்டு மாடு, பாம்பு, பறவைகள் ஆபத்தில் சிக்கும் போது மீட்க வனச்சரகர் தலைமையில் சிறு குழு உள்ளது. இது குறித்து தொலைபேசி வழியாக ஆண்டுக்கு 700 புகார்கள் வருகின்றன. குரங்கு, பாம்பு அதிகம்மீட்கப்படுகிறது. எங்களுடன் வன ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து மீட்க உதவுவதில் மகிழ்ச்சி.

வாடிப்பட்டி அருகே அனிமல் பாஸ் ஓவர் பாலம் வருகிறதாமே
வாடிப்பட்டி அருகே வகுத்து மலை பகுதியில் ஆய்வு செய்து அனிமல் பாஸ் ஓவர் பாலம் அவசியம் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். பாலத்தின் கீழேசிறு உயிரினங்கள் செல்ல அண்டர் பாஸ் பாலம் அமைகிறது. இதே போல் சத்திரப்பட்டி அருகேவேம்பரளியில் கூட விலங்குகள் செல்ல அண்டர் பாஸ்' பாலம் கேட்டுள்ளோம்.

மதுரையில் மரக்கன்று, விதைகள் விதைப்பு பணிகள் குறித்து
திருமங்கலம் நெடுஞ்சாலைநடுவே 6000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளோம். அது 10 அடிக்கு மேல் வளர்ந்துள்ளது. வனம், மலைப் பகுதிகளில் பல லட்சம் விதைகள் விதைத்துள்ளோம்.இந்தாண்டு தமிழ்நாடு பசுமை திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் விதைகள் விதைக்கவுள்ளோம். நர்சரிகளில் தொடர்ந்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறோம். இவ்வாறு கூறினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement