Load Image
Advertisement

தேயிலையை குப்பையில் கொட்டும் விவசாயிகள்:தொழிற்சாலைகளில் கோட்டா முறையால் விரக்தி

கோத்தகிரி:நீலகிரி மாவட்ட தேயிலை தொழிற்சாலைகளில், 'கோட்டா' முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், பசுந்தேயிலையை வினியோகிக்க முடியாமல், குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில், 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அனைத்து தோட்டங்களிலும் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை தொழிற்சாலைகளில் துாள் உற்பத்தி அதிகரித்து, விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

ஒரு மாதமாக, 1 கிலோ பசுந்தேயிலைக்கு, 8 - 12 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. 1 கிலோ பசுந்தேயிலை பறிக்க, 6 ரூபாய் கூலியுடன், சுமை கூலிக்கு 2 ரூபாய் வரை செலவாகிறது. இதனால், தோட்டங்களை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலைகள் கோட்டா முறையை அமல்படுத்தி, குறிப்பிட்ட அளவு மட்டுமே பசுந்தேயிலை கொள்முதல் செய்கின்றன.இதனால், தரமான தேயிலையை கூட தொழிற் சாலைகளுக்கு வினியோகிக்க முடியாமல், குப்பையில் கொட்ட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான தோட்டங்களில் பறிக்கப்படாத இலைகள் முதிர்ந்து, கரட்டு இலையாக மாறி வருவதால், விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது.மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் போஜன் கூறுகையில், ''தொழிற்சாலைகள் கோட்டா முறையை கை விட்டு, வாரியம் நிர்ணயித்த விலையை வழங்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்,'' என்றார்.

தேயிலை தொழிற்சாலைகளின் ஆலோசனை அலுவலர் பாரதிராஜா கூறுகையில், ''தேயிலை வாரியம், அனைத்து விவசாயிகளிடம் இருந்தும், பசுந்தேயிலை கொள்முதல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. ''தொழிற்சாலைகளின் அரவைத் திறனை பொறுத்து, கொள்முதல் செய்யப்படுகிறது. ஒருபோதும், கோட்டா முறையை அமல்படுத்த வாரியம் கூறியது கிடையாது. ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement