ஒரே வளாகத்தில் இரு அரசு பள்ளிகள்இடப்பற்றாக்குறையால் தத்தளிக்கும் அவலம்
மணலிபுதுநகர், அரசு உயர்நிலை பள்ளி - ஊராட்சி துவக்கப்பள்ளியில், வகுப்பறை கட்டடம் பற்றாக்குறையால், மாணவர் சேர்க்கை தடைபட்டு உள்ளது.சென்னை, மணலிபுதுநகர், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 900க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 15 வகுப்பறைகள் உள்ளன.கல்வி போதிப்பதில், சிறந்த அணுகுமுறையுடன் செயல்படும் இப்பள்ளியில், பிள்ளைகளை சேர்க்க சுற்றுவட்டார பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால், இடப்பற்றாக்குறையால், குறிப்பிட்ட அளவு மாணவர் சேர்க்கை மட்டுமே சாத்தியப்படுகிறது.நடப்பாண்டில், 212 மாணவர்கள் வெளியேறிய நிலையில், 700 மாணவர்கள் படிக்கின்றனர். முதலாம் வகுப்பில், 120 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.மாணவர்கள் சேர்க்கை முடிவில், எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கக் கூடும் என தெரிகிறது. ஆனால், கட்டட வசதிகள் இல்லாததால், மோட்டார் அறை, பள்ளி கலையரங்கம், திறந்த வெளிகளில் மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது.தனி வளாகம்இதே வளாகத்தில், 2017ல் துவங்கப்பட்ட, மணலிபுதுநகர், அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பில் சேர, நுாற்றுக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளதால், எண்ணிக்கை உயரும்.ஆனால், உயர்நிலைப்பள்ளிக்காக, எட்டு வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே உள்ளன. தவிர, மாடியில் தற்காலிகமாக தகர சீட் போட்ட அறைகளில் மாணவ - மாணவியர் அமர வைக்கப்பட்டு, வகுப்புகள் நடக்கின்றன.மழைக்காலத்தில் பிரச்னை இல்லை. வெயில்காலத்தில், மதிய நேரங்களில் புழுக்கம் தாளாமல் மாணவர்கள் தவிக்க நேரிடுகிறது. சாலை மட்டத்தை காட்டிலும் பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால், சாதாரண மழைக்கே, தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.நடப்பாண்டில், இப்பள்ளியில் இருந்து, 10ம் வகுப்பு தேர்வெழுதிய, 31 பேரில், 432 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த சமரன் நம்பி உட்பட, 30 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 97 சதவீத தேர்ச்சி.இது குறித்து, பள்ளி மேலாண்மை குழுவினர் கூறியதாவது:இரு பள்ளிகளும், சுற்றுவட்டார மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளன. அதன் காரணமாக, தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்க்க, பெற்றோர் போட்டி போட்டு முன் வருகின்றனர்.ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக, பலரை வேறு பள்ளிகளுக்கு திருப்பிவிட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் மாணவர்களுக்கு, கட்டட வசதி இல்லாததால், கலையரங்கம், மோட்டார் அறை, தகர சீட் போட்ட அறைகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு ஒரே தீர்வு, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, தனி வளாகத்தில் கட்டட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பள்ளியில் இருந்து, 600 மீட்டர் துாரத்தில், அரசு பள்ளி ஒன்றிற்கு விளையாட்டு திடலுக்காக, ௫ ஏக்கர் நிலம் உள்ளது. அதில், ௨ ஏக்கர் வழங்கினால், உயர்நிலைப் பள்ளிக்கு கட்டட வசதி ஏற்படுத்தலாம். உயர்நிலைப் பள்ளி வேறு இடத்திற்கு மாறினால், துவக்கப்பள்ளிக்கு கட்டட வசதி போதுமானதாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!