டி.என்.சி.ஏ., கிரிக்கெட்டில் பாரிஸ் கிளப் அபாரம் : தெற்கு ரயில்வே வீரர் அபிஷேக் மாணிக் சதம் வீண்
சென்னை, சென்னையில் நடந்த டி.என்.சி.ஏ., - டிவிஷன் கிரிக்கெட் 'லீக் போட்டியில், தெற்கு ரயில்வே அணியை, 'பாரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' அணி வீழ்த்தியது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. இப்போட்டியில், பல்வேறு கிரிக்கெட் கிளப் அணிகள் பங்கேற்று, லீக் முறையில் மோதி வருகின்றன.இரண்டாவது டிவிஷன் போட்டியில், தெற்கு ரயில்வே அணி மற்றும் பாரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின.இதில், முதலில் பேட் செய்த ரயில்வே அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. அணியின் வீரர் ரெட்டி அபிஷேக் மாணிக் 120 பந்துகளில் 14 பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 150 ரன்கள் குவித்தார்.கடினமான ஸ்கோரை நோக்கி, அடுத்து களமிறங்கிய பாரிஸ் கிளப் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது.அந்த அணியின் வீரரான சச்சின் ஓம்பிரகாஷ், 112 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.பிரசாந்த் பண்டாரி அதிரடியாக விளையாடி 73 பந்துகளில் 16 பவுண்டரி அடித்து, 120 ரன்கள் குவித்தார். இவர்களுடன் பிரசாந்த் பத்ரிநாத் 112 ரன்கள் எடுத்து கைகொடுக்க, பாரிஸ் கிளப் அணி 44.1 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியன் வங்கி வெற்றி
மற்றொரு போட்டியில், ஏ.ஜி.எஸ்., ஆபீஸ் கிளப் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து, 215 ரன்களை எடுத்தது. அணியின் வீரர் ரிஷீக் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விறுவிறுப்பான போட்டியில் அடுத்து களமிறங்கிய இந்தியன் வங்கி அணி, 48.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!