Load Image
dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனையில் திறக்கப்படுமா முதல்வரின் காப்பீடு திட்ட அலுவலகம்?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகம் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம், செங்கல்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ளது.இதய அறுவை சிகிச்சைகள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், விபத்து மற்றும் அவசர சிகிச்சைகள், கொரோனா சிகிச்சை, செயற்கை உடல் உறுப்புகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு, மேற்கண்ட அலுவலகத்தில் நோயாளிகள் சான்று பெற வேண்டும்.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைக்கு சான்று பெற, மருத்துவ காப்பீடு அலுவலகத்திற்கு, நேரில் வரவேண்டி உள்ளது.இந்த சான்று பெறுவதற்கு, நோயாளிகளின் உறவினர்கள், காலை 6:00 மணிக்கே வந்து, 'டோக்கன்' பெற வேண்டும். இங்கு, டோக்கன் வாங்கினாலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், அவசர சிகிச்சைக்கு சான்று தேவைப்படுவோர், உரிய நேரத்தில் சான்று பெற முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அரசு மற்றும் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெறுவோர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சான்று பெற்றால் மட்டுமே, அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.எனவே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் திறக்க வேண்டும் என, நோயாளிகளின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement