Load Image
dinamalar telegram
Advertisement

தமிழக இளைஞர்கள் 35 ஆயிரம் பேர் விமானப் படையில் இணைய ஆர்வம்

இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்ற, தமிழக மண்டலத்தில் இருந்து, 35 ஆயிரம் இளைஞர்கள் ஆர்வமுடன் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ராணுவத்தில் இளைஞர்கள் சேரும் வகையில், 'அக்னிபத்' என்ற திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப் பட்டது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த, 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவர். ஆறு மாத பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் பணி முடித்த வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விமானப் படையில் சேரும் இளைஞர்களுக்கு, 'அக்னிவீர் வாயு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர, https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில், இன்று முதல் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு, ஜூலை 24 முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, இந்திய விமானப் படையின் தமிழ்நாடு மண்டல தேர்வு குழு அதிகாரி வினம்ரதா ஷர்மா கூறியதாவது: விமானப் படையில் நிர்வாகம், மருத்துவ பிரிவு, வாகன தொழில்நுட்பம், பிட்டர் உட்பட பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத பதவிகள் நிறைய உள்ளன. இவற்றில் பயணிமர்த்த, அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப் படையில் 3,000 அக்னிவீர் வாயு வீரர்கள் நாடு முழுதும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விமானப் படையில் சேரும் வீரர்களுக்கு, தொழில்நுட்பத் துறையில் அதிக திறன் வளர்க்க, நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்வி ரீதியாக தங்களது பட்டப் படிப்புகளையும் மேற்கொள்ள முடியும்.நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளியேற விரும்பும் வீரர்களுக்கு, விமானம் தொடர்பான பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. விமானப் படையில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற, இது மிகச்சிறந்த தருணம்.
அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு பல மாதங்களுக்கு முன், விமானப் படையில் சேர்வது தொடர்பாக, தமிழக மண்டலம் சார்பில், இளைஞர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.அதில், 35 ஆயிரம் பேர் விமானப் படையில் இணைந்து சேவையாற்ற விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரிக்கும். அவ்வாறு விருப்பம் தெரிவித்த பலருக்கு, இது ஒரு பொன்னான வாய்ப்பு.
இன்று முதல் ஜூலை 5 வரை, விமானப் படையில் சேர விண்ணப்பிக்கலாம். முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். இந்த தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்.இதன் பின், உடல் தகுதி உட்பட, பல்வேறு தேர்வு நடைமுறைகள் வாயிலாக, அக்னிவீர் வாயு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர் -
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement