Load Image
dinamalar telegram
Advertisement

தீபாவளி முன்பதிவு: சில நிமிடத்தில் தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

சென்னை:தீபாவளியையொட்டி, விரைவு ரயில்களில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில், நேற்று டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.விரைவு ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்., 24ல் வருகிறது.

காத்திருப்பு பட்டியல்
எனவே, 21ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்றே, சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான, ரயில் முன்பதிவு நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தென் மாவட்ட விரைவு ரயில்களில், டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
பெரும்பாலான விரைவு ரயில்களில், 7 முதல் 15 நிமிடங்களில், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நிரம்பிவிட்டன. அதன்பின், ஏ.சி., பெட்டிகளுக்கான டிக்கெட்டுகள் படிப்படியாக முன்பதிவு முடிந்தன.
சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் பாண்டியன், முத்துநகர், பொதிகை, அனந்தபுரி, கன்னியாகுமரி, நெல்லை, திருச்செந்துார், நாகர்கோவில் விரைவு ரயில்களில், படுக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் 100ஐ தாண்டியது. பாண்டியன் விரைவு ரயிலில் அதிகபட்சமாக காத்திருப்பு பட்டியல் 340ஐ தாண்டியது. பெரும்பாலான 'ஏசி' பெட்டிகளிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.
இருப்பினும், பகல் நேர ரயில்களான, வைகை, குருவாயூர் ரயில்களிலும், ஒரு சில ரயில்களிலும் மட்டும் முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருந்தன.இதேபோல, சென்னை சென்ட்ரல் - மதுரை, நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. 'ஏசி' பெட்டிகளில் மட்டும் கணிசமான டிக்கெட்டுகள்இருந்தன. பகல் நேர ரயில்களான, கோவை இன்டர்சிட்டி, கோவை ரயில்களில் டிக்கெட்டுகள் இருந்தன.

நடவடிக்கை
அக்., 22 சனியன்று பயணம் செய்ய இன்றும், அக்., 23 ஞாயிறு பயணிக்க நாளையும், டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், தென் மாவட்ட விரைவு ரயில்களின் படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருவதால், டிக்கெட் கவுன்ட்டர்களில் பெரிதாக கூட்டம் இல்லை. அதிகமாக காத்திருப்பு பட்டியல் உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement