சாலை அமைக்க அனுமதி மறுப்புகிராம மக்கள் மறியல் போராட்டம்
முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே பொந்தம்புளி கிராமத்திற்கு புதிதாக சாலை அமைக்க அனுமதி வழங்காததை கண்டித்து மக்கள் வனச்சரக அலுவலர் காரை மறித்து முற்றுகையிட்டு சாலைமறியல் செய்தனர்.பொந்தம்புளியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளி,கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சித்திரங்குடி வழியாக 6 கி.மீ. நடந்து சென்று காத்திருந்து பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.இக்கிராமத்திற்கு சித்திரங்குடி வழியாக 60 ஆண்டுகளுக்கு மேலாகவே சாலைவசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். ஆம்புலன்ஸ் கூட வராததால் நோயாளிகளை கட்டிலில் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது. ஆட்டோவும் வருவதில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழ்செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டி உள்ளது.நிறுத்தம்: கடந்த சிலமாதங்களுக்கு முன் சித்திரங்குடி கண்மாய் வழியாக சுற்றி செல்வதற்கு சாலை அமைக்க 345 மீ தூரம் ரூ.6.45 லட்சம் மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது முதற்கட்டமாக சாலை அமைக்கும் பணி நடந்தது. இப்பகுதி சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு உட்பட்டது என்று கூறி அப்பணியை வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.மறியல்: இங்கு முறையான அனுமதி பெற்று சாலை அமைக்க வேண்டும் என ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திவ்யலட்சுமி கூறினார். இந்நிலையில் இப்பிரச்னையில் நேற்று பொந்தம்புளி கிராமமக்கள் சித்திரங்குடியில் வனச்சரக அலுவலர் காரை மறித்து முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் தாசில்தார் சிவக்குமார், மண்டல துணை தாசில்தார்கள் மீனாட்சிசுந்தரம், சசிகலா பேசினர். முறையான ஒப்புதல் பெற்று விரைவில் சாலை அமைக்கப்படும் என்று கூறியதை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!