மஹாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணிக்கு ‛மஹா விகாஷ் அகாதி' என பெயரிடப்பட்டுள்ளது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார். இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே, சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் பலருடன், குஜராத் மாநிலம், சூரத்துக்கு 20ம் தேதி இரவு சென்றார். அங்கு எம்.எல்.ஏ.,க்களுடன் 'ரிசார்ட்' ஒன்றில் தங்கி இருந்தார். பிறகு சூரத்தில் தங்கியிருந்த ஷிண்டேவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், விமானத்தில் அசாம் மாநிலம், கவுஹாத்திக்கு சென்றனர். அங்கு 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.,க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நெருக்கடியான சூழல்களுக்கு மத்தியில் ஏக்னாத் ஷிண்டே உடன் சென்ற எம்எல்ஏ.,க்களில் ஒருவரான நிதின் தேஷ்முக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர், ‛நான் கடத்தப்பட்டேன், எனக்கு மாரடைப்பு எதுவும் இல்லை, எனது ஆதரவு உத்தவ் தாக்கரேவுக்கு தான்' எனத் தெரிவித்து, சூரத்தில் இருந்து தப்பியிருந்தார்.
பரிசீலிக்க தயார்
இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது: உத்தவ் தாக்கரே விரைவில் வர்ஷா இல்லத்திற்கு வருவார். கவுஹாத்தியில் உள்ள 21 எம்எல்ஏ.,க்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர், அவர்கள் மும்பை திரும்பியதும் எங்களுடன் இருப்பார்கள். அவர்கள் கவுஹாத்தியில் இருந்து தொடர்பு கொள்ளாமல், மீண்டும் மும்பைக்கு வந்து முதல்வரிடம் விவாதிக்க வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால், கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அதற்காக அவர்கள் இங்கு வந்து முதல்வரிடம் விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஷிண்டே குழுவில் இருந்து தப்பி வந்த நிதின் தேஷ்முக் கூறுகையில், ‛நாங்கள் வலுக்கட்டாயமாக சூரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான் தப்பி ஓட முயன்றேன், ஆனால் சூரத் போலீசார் என்னை பிடித்தனர். எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர். 300 முதல் 350 போலீசார் எங்களை கண்காணித்து வந்தனர். எனக்கு முன்பாக எம்.எல்.ஏ பிரகாஷ் அபித்கர் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. சூரத்தின் ஹோட்டலை அடைந்தவுடன் தான் கூட்டணி அரசுக்கு எதிரான சதி பற்றி எங்களுக்குத் தெரிந்தது,' என்றார்.
வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறும் நிதின் தேஷ்முக்கின் குற்றச்சாட்டை ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் குழு மறுத்துள்ளது. மேலும், எம்எல்ஏ.,க்களுடன் அவர் மகிழ்வுடனே விமானத்தில் பயணிப்பது போன்ற புகைப்படங்களையும் அக்குழு வெளியிட்டுள்ளது.
Sandharppavathaththin peyar thaan saamna