சென்னை: அதிமுக பொதுக்குழுவில் ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு மேடையில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கீழிறங்கினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 23) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையே மோதல் நீடித்த நிலையில், பரபரப்பான சூழலில் பொதுக்குழு கூடியது. இதில் பங்கேற்பதற்காக பன்னீர்செல்வம், பழனிசாமி தனித்தனியாக வந்தனர். பொதுக்குழு மேடையில் 80 இருக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் இரு தரப்பினரின் சார்பிலும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

பொதுக்குழு நடக்கும் இடத்தில் உறுப்பினர்கள் அதிகளவு குவிந்திருந்தனர். இந்த நிலையில் கூட்டத்தினர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஓபிஎஸ் துரோகி என்றும், அதிமுக.,வில் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஓபிஎஸ் வெளியே போக வேண்டும் என்றும் பலரும் முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ்.,க்கு எதிராக முழக்கமிட்டதால் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார். உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தை அடுத்து முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இபிஎஸ்.,க்கு ஆதரவாக கோஷம்
பின்னர் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மண்டபத்திற்குள் வந்த போது, ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். '' இரட்டை தலைமை வேண்டாம்'', '' ஒற்றை தலைமை வேண்டும்'', என கோஷம் எழுப்பினர். பழனிசாமியை பலத்த பாதுகாப்புடன் போலீசார் மற்றும் பவுன்சர்கள் மேடைக்கு அழைத்து வந்தனர்.
இதயக்கனி போனதற்கு பிறகு எந்த காயும் கனியவில்லை அதிமுகவில்.