Load Image
dinamalar telegram
Advertisement

ஒற்றை தலைமை தேவையில்லை பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை:''அ.தி.மு.க.,வுக்கு ஒற்றைத்தலைமை தேவை இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே தொடர வேண்டும்,'' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று இரவு அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே கட்சி சட்ட விதி. ஜெயலலிதா மறைவுக்கு பின், நானும், பழனிசாமியும் இணைந்தபோது, ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவியில் யாரும் இருக்கக் கூடாது என முடிவு செய்து, இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. அப்போது, எனக்கு துணை முதல்வர், அமைச்சர் பதவி தேவை இல்லை என்றேன்.

பிளவுபடக் கூடாது
இரட்டை தலைமை உருவாக்கியபோது, நான் ஒருங்கிணைப்பாளர் என்றனர்; ஒப்புக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து, ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருவரும் கையெழுத்திட உரிமை உள்ளது என்றனர். அதற்கு மதிப்பளித்து, இருவர் கையெழுத்திடுவதை ஏற்றேன்.
பிரதமரை சந்தித்தபோது, அவர் துணை முதல்வர் பதவியை ஏற்கும்படி அழுத்தம் கொடுத்ததால் ஏற்றேன்; நன்றாகத் தான் போனது. ஒற்றைத் தலைமை கோஷம் ஏன் உருவானது என்பது எனக்கே தெரியவில்லை. மாவட்டச் செயலர்கள் கூட்டம் முடியும் நேரத்தில், சிலர் கருத்துக்கள் கூற வேண்டும் என்ற அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தியை பேச, பழனிசாமி அழைத்தார்.
அவர் தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஆரம்பித்தார்.இது குறித்து, என்னிடம் கலந்து பேசவில்லை; தலைமை நிர்வாகிகளிடமும் பேசவில்லை. ஒரு அறையில் பேச வேண்டிய கருத்தை, வெளிப்படையாக பேசியதும்; பேட்டி கொடுக்கக் கூடாது எனக் கூறியும், ஜெயகுமார் பேட்டி அளித்ததால் பிரச்னை பூதாகரமாகி உள்ளது.
ஜெயலலிதாவால் இரு முறை முதல்வராக நியமிக்கப்பட்டு, மன நிறைவோடு பணியாற்றி உள்ளேன்; அது போதும். நான் அதிகார ஆசை கொண்டவன் அல்ல. தொண்டர்களுக்காக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறேன். அவர்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. ஒற்றுமையோடு பணியாற்றி, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய நேரத்தில், இந்த பிரச்னை தேவையா என, மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுள்ளேன்.

மீண்டும் பொதுச்செயலர் பதவியை யாருக்காவது கொடுக்கும் சூழல் உருவானால், அது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். கட்சி பிளவுபடக் கூடாது என்பது தான் என் எண்ணம். இன்றைய சூழலில், ஒற்றைத் தலைமை தேவை இல்லை.

உயர்மட்ட குழு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தேர்தல் கமிஷனில் ஒப்புதல் பெற்றுள்ளோம்.இரு மாதங்களுக்கு முன், தேர்தல் முறையாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெறப்பட்டு, உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதை பொதுக்குழுவில் வைப்பது மரபு என்பதால், பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து அவசியம். இருவர் ஒப்புதல் இல்லாமல், தீர்மானம் கொண்டு வர முடியாது. இந்த பிரச்னையை சுமுகமாக முடிக்க, பேச்சு நடந்து வருகிறது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடரட்டும். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா உடன் பணியாற்றிய, 14 பேரை வைத்து உயர்மட்ட குழு அமைக்கலாம். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தெரிவித்து உள்ளோம்.

சுமுக முடிவு
பழனிசாமியுடன் பேச நான் தயார். இந்த பிரச்னை எப்படி வந்தது என்பதை, இருவரும் அமர்ந்து பேசி கண்டிக்க வேண்டும். மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசியதை, வெளியில் பேட்டி கொடுத்தது தான், இந்த பிரச்னைக்கு காரணம்.நான் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்ததற்கு மூலக் காரணமே தொண்டர்கள் தான். கட்சி பின்னடைவை, பிளவை சந்திக்க, பன்னீர்செல்வம் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். தற்போது ஏற்பட்டிருப்பது உட்கட்சி பிரச்னை. நாங்களாக பேசி தீர்த்துக் கொள்வோம். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சுமுக முடிவு எட்டப்பட வேண்டும் என, இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement