Load Image
dinamalar telegram
Advertisement

கரைவேட்டி கட்டாத ஆபீசரு... கட்சியில சேர ஜரூரு!

Tamil News
ADVERTISEMENT
''பா.ஜ., தலைவர் அண்ணாமலையோட அறிக்கையால, நம்ம ஊரை, ஒட்டுமொத்த தமிழகமே திரும்பிப் பார்த்துச்சு, கவனிச்சியா?'' என, பேச்சை துவக்கினாள் சித்ரா.

''கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் தர்றதுல்ல ஊழல் நடந்திருக்கிறதா, அவரோட அறிக்கைல, நம்ம சிட்டிக்குள்ள இருக்கிற ஒரு கம்பெனியோட பேரும் அடிபட்டுச்சு... போன வாரம் முழுக்க இதப் பத்திதான் பேச்சு. இந்த நிலைமைல, திடீர்ன்னு, ஒருநாள் சுகாதாரத்துறை செயலாளர் வேற, இங்க வந்துட்டு போயிருக்காரு.''இது, வெறும் துறை ரீதியான ஆய்வுதான்'ன்னு அதிகாரிங்க சொன்னாலும், 'அண்ணாமலை குற்றச்சாட்டு தொடர்பான டெண்டர் விவகாரம் சம்பந்தமா, விசாரணை பண்ணதான் அவரு வந்துட்டு போயிருக்கார்'ன்னு, பா.ஜ.,வினர், ஊர் முழுக்க கிளப்பி விட்டுட்டாங்க. இப்ப என்னடான்னா…அந்த செயலாளரையே வேற துறைக்கு மாத்திட்டாங்க; என்ன நடக்குதுன்னே புரியலையே'' என, சிந்தனையில் மூழ்கினாள் மித்ரா.''ஜி.ெஹச்.,ல கிடைக்கிற சிகிச்சையை நம்பித்தான் ஏழை, நடுத்தர மக்கள் பலரும் வர்றாங்க... திருப்பூர் ஜி.ெஹச்.,ல, நோயாளிகளுக்கு நுழைவுச்சீட்டு தர்ற வேல செய்றவங்க, ெஹட்போனை மாட்டிக்கிட்டு, செல்போன்ல பாட்டு கேட்டுக்கிட்டே தான், 'டோக்கன்' தர்றாங்களாம். இதனால, உடம்பு சரியில்லாம வர்றவங்க ஒரு முறைக்கு, நாலு முறை தங்களோட பேர், வயசு விவரத்தை சொல்ல வேண்டியிருக்காம். கஷ்டத்தோட வர்ற நோயாளிங்க இவங்க ஜாலியா வேல பாக்கறதப் பாத்து நொந்துக்கிறாங்க...''இப்பல்லாம் எல்லா துறையிலயும் இந்த மாதிரி ஏதாவது ஒரு புகார் வந்துட்டேதான் இருக்கு. போன வாரம் அவிநாசியில உடல் நலக்குறைவால ஒரு லேடி இறந்துட்டாங்க. அவங்களோட சடலத்தை, அவிநாசி ஜி.ெஹச்.,ல இருக்கிற பிரேத அறைல வச்சு, பிரேதப் பரிசோதனை செஞ்சிருக்காங்க. சடலத்தை அவங்க சொந்தக்காரங்க கிட்ட ஒப்படைக்கிற வேலையில இருக்கற போலீஸ்காரங்க, 1,000, 2,000 ரூபாய்ன்னு வாங்கிக்குவாங்களாம். ஆனா, அந்தம்மாவோட சடலத்தை பிரேத பரிசோதனை செஞ்சு, ஒப்படைக்கிற பொறுப்பை ஏத்துக்கிட்ட ஒரு லேடி போலீஸ், ஆறாயிரம் ரூபாய் வசூல் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்க,'' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள்.''அடக் கொடுமையே! பிரேத பரிசோதனை முடிஞ்சதுக்கு அப்புறம் அந்த சடலத்தை சுத்தறதுக்கு தேவையான காடா துணியை கூட, இறந்தவங்களோட சொந்தக்காரங்க தான் வாங்கி தரணுமாமே. அதுக்கெல்லாம் சேர்த்து தான், இப்படி காசு வாங்கறாங்ன்னு நானும் கூட கேள்விப்பட்டேன்,'' என்று மித்ரா கவலைப்பட்டாள்.

கண்டுகொள்ளாத போலீஸ்!
''நீ போலீசை பத்தி பேசவும் தான் ஒரு விஷயம் ஞாபகம் வருது. பல்லடம், மாணிக்காபுரம் ரோட்ல சரக்கு விற்பனை, லேடீஸ் மேட்டர்ன்னு, எல்லா 'இல்லீகல்' சமாசாரமும் நடக்குதாம். நடவடிக்கை எடுக்கச் சொல்லி பொதுமக்கள் புகார் கொடுத்தாலும், போலீஸ்காரங்க கண்டுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம, எல்லாரும் வீட்ட காலி பண்ணிட்டு, கலெக்டர் ஆபீஸ் போய் 'செட்டில்' ஆகிடலாம்; அப்ப என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்ன்னு, சிலரு பேசிக்கிட்டு இருக்கிறதா, அங்க இருக்கிற 'செல்வன்' அங்கிள் சொன்னாரு,'' என கேட்டதை பகிர்ந்தாள் சித்ரா.''இதே மாதிரிதான், காங்கயத்துலேயும், கட்டப்பஞ்சாயத்து நிறைய நடக்குதாம். அங்க இருக்கிற பெரிய அதிகாரி, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ரொம்பவே வளைஞ்சு போறாராம். கரை வேட்டி கட்டாத போலீஸ் அதிகாரின்னு, பேசற அளவுக்கு நடந்துக்கிறாராம். அவரை மாத்தணும்ன்னு, மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்' கூட போயிருக்காம். 'என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது; அப்படியே மாத்தினாலும் வேலையை விட்டுட்டு, கட்சியில சேர்ந்துடுவேன்ங்கற மாதிரி பேசிக்கிட்டு இருக்காருன்னு சொல்றாங்க... எதுக்கும் 'குமரேசன்' அண்ணா கிட்ட கேட்டா விவரம் சொல்வாரு,'' என்றாள், அதிகாரி பாணியில், மித்ரா.''ம்ம்ம்… அதிகாரிங்க எல்லாம் ரொம்ப உஷாராத்தான் இருக்காங்க,'' என பெருமூச்சு விட்ட சித்ரா, ''ஏதோ நம்ம ஊர்ல அப்பப்போ மழை பெய்து; சாகுபடி பண்ணலாம்ன்னு விவசாயிங்க ஆசைப்பட்டா, உரமே கிடைக்கிறது இல்லையாம். சொசைட்டிகள்ல உரத்துக்கு தட்டுப்பாடுங்கறதால, தனியார் கடைகள்ல தான் உரம் வாங்க வேண்டியிருக்காம். அவங்க, ரொம்ப அதிக விலைக்கு விக்கிறாங்களாம். இதை கண்காணிக்க வேண்டிய வேளாண் துறையும், நடவடிக்கை எடுக்க வேண்டிய கூட்டுறவு துறையும் அமைதியா இருக்காங்களாம்,'' என்று கூறிய மித்ராவின் முகத்தில் கவலை ரேகைகள்.''ஒரு வேள, எல்லோரும் கூட்டணி போட்டு, கல்லா கட்றதுக்கான ஏற்பாடா கூட இருக்கலாம்; யாருக்கு தெரியும்,'' என, கொளுத்தி போட்டாள் சித்ரா.

'பறக்கும்' படை 'பறக்காது'
''மின் திருட்டை கண்டுபிடிச்சு தடுக்கற மின்வாரிய பறக்கும் படை பிரிவுக்கு, போன் பண்ணி, 'மின்சாரத்த திருடறாங்க; வந்து பாருங்க'ன்னு, திருப்பூர் வடக்கு பகுதியில் இருந்து, ஒருத்தரு தகவல் சொல்லியிருக்காரு. எதிர்முனைல பேசின பறக்கும் படை பிரிவைச் சேர்ந்த ஒருத்தரு, 'நாங்க பறக்கும் படை தான். ஆனா, எங்களுக்கு 'ஜீப்' எல்லாம் கிடையாது. நீங்க நினைக்கற மாதிரி, மின்னல் மாதிரி வந்து, நிமிஷத்துல நடவடிக்கையெல்லாம் எடுக்க முடியாது. புகார்களை ஒவ்வொண்ணா தான் பார்த்துட்டு வருவோம்''ன்னு, தங்களோட நிலைமையை விளக்கியிருக்காரு; இதோட முடிஞ்சா பராவயில்ல; யார் மின்சாரத்தை திருடினாங்களோ, அந்த கட்டட உரிமையாளரு, புகார் கொடுத்தவரை போன்ல கூப்பிட்டு, 'நீங்க ஏன், புகார் எல்லாம் பண்றீங்க'ன்னு கேட்டாராம். 'நான்தான் அவரு மேல புகார் பண்ணுனேன்னு, எப்படி அவருக்கு தெரிஞ்சதுன்னு, 'ஷாக்' ஆகிட்டாராம் புகார் கொடுத்தவரு,'' என்று, படபடத்தாள் சித்ரா.''எல்லாம் பறக்கும் படை அதி காரிகளோட 'திருவிளையாடல்' தான்,'' என, நகைத்தாள் மித்ரா.''அக்கா லேசா தலைவலிக்கிற மாதிரி இருக்கு; காபி கலக்கி தர்றீங்களா'' என, மித்ரா கேட்க, சூடாக காபி கலக்கி எடுத்து வந்தாள் சித்ரா. ''நல்ல தண்ணி வர்ற மாதிரி இருக்கு மித்து; நீ காபி குடிச்சுட்டிரு அஞ்சு நிமிஷத்துல வர்றேன்'' என்றவள், ''நல்ல தண்ணியே இப்பல்லாம் கலங்கித்தான் வருது; என்னதான் பண்றதோ,'' என புலம்பிய படியே, சரியாக ஐந்து நிமிடம் கழித்து வந்து சோபாவில் அமர்ந்தாள்.

வசூல் செய்தது யாரு?
''தண்ணின்னு சொல்லவும் தான் ஒரு விஷயம் ஞாபகம் வருது. திருமுருகன்பூண்டி நகராட்சியில, குடிநீர் குழாய் இணைப்பு தர்ற விவகாரத்துல ஏகப்பட்ட வில்லங்கமாம். நெறைய அனுமதியில்லாத இணைப்பு இருக்கறதால, அதையெல்லாம் சரிபடுத்திட்டு தான், புதுசா இணைப்பு கொடுக்கலாம்ன்னு, இருக்காங்களாம். ஆனா, அவிநாசி பைபாஸ் ரோட்டை ஒட்டி, 39 வீடுகளை உள்ளடக்கி ஒரு 'சைட்' இருக்கு. அங்க இருக்கற வீட்டுக்காரங்க நகராட்சி அதிகாரிங்க கிட்ட, 'நாங்க போன வருஷமே, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கேட்டு, 60 ஆயிரம் ரூபா வரை கொடுத்திருக்கோம்; இணைப்பு கொடுங்க'ங்னு சொல்லியிருக்காங்க.''போன, 10 வருஷமா நாங்க அதிகாரபூர்வமா யாருக்கும், புதிய இணைப்பு தரல; அப்படியே கொடுத்தாலும், அவ்வளவு தொகையெல்லாம் வாங்க மாட்டோம். நீங்க யாருகிட்ட பணம் கொடுத்தீங்களோ, அவங்க கிட்டயே போய் கேளுங்கன்னு சொல்லிட்டாராம். 'சைட்டை வித்தவங்க தான், பணத்தை வசூல் செஞ்சாங்க'ன்னு, குடியிருப்புவாசிங்க சொல்ல, 'அவங்க யார்கிட்ட பணத்தை கொடுத்தாங்கன்னு கேளுங்க'ன்னு, அதிகாரிங்க சொல்லி அனுப்பிட்டாங்களாம்.''பூண்டி நகராட்சிக்குள்ள அனுமதியில்லா குடிநீர் இணைப்பு தந்த விஷயத்தை கண்டுபிடிக்கவே, தனியா ஒரு விசாரணை கமிஷன் போடணும் போல'' என்று மித்ரா விவரித்தாள்.

ஆன்மிக 'அரசியல்'
''பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தப்போ, திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு, ஸ்ரீரங்கத்தில் இருந்து நடை அழகுகளை அழைத்து, பல்லக்கு ஊர்வலம் நடத்தலாம்னு, அதிகாரிங்க அனுமதியோட, பக்தர்கள் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. இதுக்காக, ஸ்ரீரங்கத்துல இருந்து, 30 பேரை கூட்டிட்டு வரவும் ஏற்பாடும் செஞ்சிருந்தாங்க. ஆனா, ஆளும்கட்சியை சேர்ந்த முக்கியமான மூணு பேர், பட்டாச்சார்யார்களை குழப்பி, நடை அழகு நிகழ்ச்சியே இல்லாம பண்ணிட்டாங்களாம். கோவில் அதிகாரிகளும், என்ன செய்றதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டாங்க. இதனால, பக்தர்கள் எல்லாம் கொதிச்சு போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''என்னக்கா கொரோனா பரவுதுன்னு வேற சொல்றாங்க. ஸ்கூல் எல்லாம் திறந்துட்டாங்க,'' என அச்சம் காட்டினாள் மித்ரா.''அப்படியெல்லாம் பரவாது. பொதுத்தேர்வு முடிஞ்ச அன்னைக்கே, நம்ம மாவட்ட கல்வி அதிகாரி ரிட்டையர்டு ஆகிட்டாரு. பெரிசா ஒரு நிகழ்ச்சி வைச்சு, அவருக்கு வழியனுப்பு விழா நடத்தணும்னு, ஒரு மாசமா திட்டம் போட்டாங்களாம். ஆனா, நிறைய தலைமையாசிரியர்ங்க ஒத்துழைக்கலையாம். கடைசியா, ஜெய்வாபாய் ஸ்கூல்ல, 'சின்னதா' ஒரு நிகழ்ச்சி நடத்தி, ஒரு சவரன்ல தங்க காசு கொடுத்து வழியனுப்பி வைச்சிட்டாங்களாம்,'' என்ற மித்ரா, ''சரிக்கா, நான் கிளம்பறேன்; டைம் ஆகுது'' எனக்கூறி ஸ்கூட்டரை கிளப்பினாள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement