தி.மு.க.,வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'மந்திரிகள் இருவரின் ஊழல் பட்டியலை அடுத்த வாரம் வெளியிடுவேன்' என அறிவித்துள்ளதால், தமிழக அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அதேநேரம், பதவியை எதிர்பார்த்துள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எந்த அமைச்சரின் தலை உருளப்போகிறது என்ற ஆர்வத்தில் உள்ளனர். இதற்கிடையில், நாளை கோட்டை நோக்கி பேரணி நடத்த உள்ள பா.ஜ., தங்களின் பலத்தை காட்ட தீவிரம் காட்டி வருகிறது.
அமைச்சர்கள் கலக்கம்:
சமீபத்தில் சென்னையில், பிரதமர் மோடி பங்கேற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு மற்றும் தி.மு.க.,வினரின் செயல்பாடு காரணமாக, பா.ஜ., கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, 'மேலும் இரு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, அடுத்த வாரம் வெளியிடுவேன்' என, அதிரடியாக அறிவித்தார். மின்துறை விவகாரம், பொங்கல் பரிசு தொகுப்பு, மஞ்சள் பைகள் முறைகேடு, போக்குவரத்து துறை, பொதுப்பணித் துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான புகார் மனுக்களும், அண்ணாமலைக்கு நெருக்கமான ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தவர்; மத்திய அரசின் செல்வாக்கும் அதிகம். அவர் வெளியிடும் பட்டியல் உண்மைத்தன்மையுடன் இருக்கும் என்பதால், ஊழல் பட்டியலில் எந்தத் துறை இடம் பெறப்போகிறது; தங்கள் பதவிக்கு சிக்கலாகி விடுமோ என, பல அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதே சமயம், முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்களின் பதவி பறிபோனால், அவர்களது மாவட்டத்தை சேர்ந்த தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலை ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
பலம் காட்ட தீவிரம்:
இதற்கிடையில், திருவாரூர் தெற்கு ரதவீதியின் பெயரை மாற்றி, கருணாநிதி பெயர் சூட்டியதை கண்டித்து, திருவாரூரில் பா.ஜ., நடத்திய முதல் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அதற்கு, 'திருவாரூர் மாடல்' என, பா.ஜ.,வினர் பெயர் சூட்டி உள்ளனர். அதே மாடலில், போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர்.
'ஜி.எஸ்.டி., வரியில், தமிழகத்திற்கு உரிய பங்கை மத்திய அரசு தரவில்லை என்ற தி.மு.க., அரசின் குற்றச்சாட்டு தவறானது' எனக் கூறியும், அரசை கண்டித்தும், நாளை கோட்டை நோக்கி பேரணியை தமிழக பா.ஜ., நடத்த உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து, 20 ஆயிரம் பேரை திரட்டி, பேரணியில் பங்கேற்க வைத்து, தங்கள் பலத்தை காட்ட, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும், பேரணியில் வலியுறுத்தப்பட உள்ளது.
எட்டு ஆண்டு சாதனை
பேரணியை தொடர்ந்து, மத்திய அரசின் எட்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை, மாநிலத்தில், 10 இடங்களில் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. மதுரை பழங்காநத்தத்தில், வரும், 4ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில், அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் பங்கேற்று பேச உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச, 'நீட்' தேர்வு பயிற்சி மையம், நாமக்கல்லில் நேற்று துவங்கப்பட்டது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பயிற்சி மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு சாதனையாக, 1.42 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும், 30 ஆயிரம் பேர் கூடுதலாகும். மத்திய அரசு, தாய்மொழியில் நீட் தேர்வை எழுதலாம் என்று அறிவித்தது. இதனால், 34 ஆயிரத்து 300 பேர், இந்த ஆண்டு தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத உள்ளனர். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கி, மருத்துவ கல்வி கிடைக்க, பிரதமர் மோடி இந்த வாய்ப்பை வழங்கி உள்ளார். கடந்த, 2016க்கு முன், அரசு, தனியார் என தனித்தனியாக மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வுகளை எழுதி, மாணவர்கள் சிரமப்பட்டனர். கல்விக் கட்டணமும் கூடுதலாக இருந்தது.இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததால், பெற்றோர் மற்றும் மாணவர்களின் சுமை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில், 58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வேறெந்த மாநிலமும் இந்தளவுக்கு பெறவில்லை. தமிழகம் தான் முதன்மை மாநிலம்.மாணவர்கள் நீட் தேர்வை கண்டு பயப்பட வேண்டாம். பல்வேறு தடைகளை தாண்டி வந்த நீங்கள், நீட் தேர்வை எளிதில் அணுகி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (95)
எல்லோரும் ஜோரா கை தட்டுங்க. இப்போ பாருங்க கீரிக்கும் பாம்புக்கும் சண்டைவிடபோரேன் .
கோவில் பெயரில் வசூல் வேட்டை. அண்ணாமலைக்கு வாரண்ட்டா ? அண்ணாமலை திக் திக் ..
அண்ணாமலை ஆட்டுகுட்டியல்ல யானைக்குட்டி புரட்டி எடுக்க போறார்
கர்நாடகாவுக்குபோய் விசாரிச்சுட்டு வா உண்மை தெரியும்
நன்று நன்று தமிழக மக்கள் கண் கட்டில் இருந்து விடுபட்டால் அதுவே போதும், உழைத்து சம்பாதித்து கொள்வார்கள். இலவசம் வேண்டாம்.