ADVERTISEMENT
சேலம் : வழக்கமாக ஜூன், 12ல் திறக்கப்படும் மேட்டூர் அணை, 77 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று( மே 24) திறக்கப்பட்டது. பாசனத்திற்கு, அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்கு முன்னர், 1942, 1943, 1944, 1945 ஆகிய ஆண்டுகளில், போதிய அளவு தண்ணீர் இருந்ததால், மேட்டூர் அணை மே மாதம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் ஜூன், 12ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதற்கு, 90 அடிக்கு மேல் நீர்மட்டம் இருக்க வேண்டும் என்பதால், பல ஆண்டுகளில், குறிப்பிட்ட நாளில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், 2020, 2021ல் நீர்மட்டம் அதிகளவில் இருந்ததால், ஜூன், 12ல் திறக்கப்பட்டது. 2021ல், தொடர்ந்து, 231 நாள் திறக்கப்பட்டு, ஜன., 28ல் மூடப்பட்டது.கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தும் போது கூட, 109 அடி, நீர் இருப்பு இருந்தது. பின், குடிநீர் தேவைக்கு மட்டும் குறைவாக நீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாளாக, கர்நாடகா மாநிலத்திலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து, 'கிடுகிடு'வென அதிகரித்துள்ளது. கடந்த 21ல், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 36 ஆயிரம் கன அடியாக இருந்தது. மழை சற்று குறைந்ததால், நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம்(மே 22), 12 ஆயிரத்து, 777 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து இருந்தால், ஒரு வாரத்தில் அணை நீர்மட்டம், 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணை கட்டி, 89 ஆண்டுகளில், இதுவரை, 41 முறை நிரம்பியுள்ளது. விரைவில், 42வது முறை அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், டெல்டா பாசனத்துக்கு வழக்கத்தை விட மிக முன்னதாக, நாளை மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் வந்து, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் வைத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். அணையில் தண்ணீர் திறப்பால் 12 மாவட்டங்களில்16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.



மேட்டூர் ஆணை திறக்கப்பட்ட வீடியோ பாதியோட ட்ரிம் பண்ணிடீங்க ரொம்ப கீழ இறங்கியும் வேலை பாத்தா நல்லா இருக்காது