மாவட்டத்தில் 82 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் 18ஆயிரத்து 481 பேர் எழுதினர். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்காக தினமலர் தினமும் மாதிரி வினா விடை வெளியிட்டு வருகிறது. குரூப் 2 தேர்வுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே தினமலர் மாதிரி வினா விடை வெளியிட்டது. இது தேர்வில் கேள்விகள் எப்படி கேட்கப்படும்; எப்படி விடையளிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள உதவியது என தேர்வு எழுதிய பலர் கூறினர்.தேனி மாவட்டத்தில் தேர்வில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது:
கலவையான வினாக்கள்
எஸ்.விக்னேஷ்வரி, எம்.டெக் பட்டதாரி :
மொழிப்பாடமாக ஆங்கிலத்தை தேர்வு செய்தேன். பயிற்சி மையம் செல்லவில்லை. பாட புத்தகங்கள் படித்து தேர்வுக்கு தயாரானேன். ஆங்கிலம், கணக்கு வினாக்கள் எளிமையாக இருந்தது. திறனாய்வு பிரிவில் சில வினாக்கள் யோசிக்கும் படி இருந்தது. பொதுப்பிரிவில் பொருளாதாரம், வரலாறு வினாக்கள் சிரமமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி விகிதம், தமிழக வரி உயர்வு போன்ற அரசின் சமீபத்திய நடவடிக்கைகளே வினாக்களாக வந்திருந்தது. முதல்முயற்சியில் நன்றாக எழுதிய திருப்தி உள்ளது. தினமலர் மாதிரி வினா விடை தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருந்தது.
நடப்பு நிகழ்வு வினாக்கள் கடினம்
டி.சித்ரா, பட்டதாரி, ஆண்டிபட்டி மையம்:
இரண்டாம் முறையாக குரூப் 2 தேர்வு எழுதி உள்ளேன். தினமலர்நாளிதழில் வெளி வந்த மாதிரி வினா விடை பகுதியால் தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என அறிய உதவியாக இருந்தது. தற்போது தமிழ், கணிதம், ஆங்கிலம், வரலாறு உட்பட்ட பிரிவுகளில் அனைத்து வினாக்களும் எளிதாகவே இருந்தது.நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் கடினமாக இருந்தது. அறிவியலில் அதிக வினாக்கள் இடம்பெறவில்லை. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் அதிகவினாக்கள் இடம் பெற்றது. முறையான பயிற்சியுடன் பாடப்புத்தகங்களை முழுமையாகபடித்தவர்கள் அதிக மதிப்பெண் எளிதில் பெறலாம்.ஓ.எம்.ஆர்., சீட் பூர்த்தி செய்வதில் சிரமம் இருந்தது. அதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்லை. பெரியகுளத்தில் இருந்து குருப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த பலருக்கும் ஆண்டிபட்டி மையம் ஒதுக்கியதால் சிரமம் ஏற்பட்டது.
பொது வினாக்கள் சிரமம்
கரு.கார்த்திகேயன், பி.இ., பட்டதாரி, கடமலைக்குண்டு:
இரண்டாவது முறையாக தேர்வு எழுதுகிறேன். 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை படித்தேன். பயிற்சி மையத்தில் சனி, ஞாயிறு வகுப்பு, பயிற்சி தேர்வுகளில் மட்டும் பங்கேற்றேன். தமிழ், கணக்கு வினாக்கள் பத்தாம் வகுப்பு பாடத்திட்ட நிலையில் இருந்தது.கணித வினாக்கள் எளிமையாக இருந்தது. தமிழில் பழைய பாடத்திட்டத்தில் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டன. திறனாய்வு வினாக்கள் யோசித்து எழுதினால் 25 மதிப்பெண் முழுமையாக பெற்று விடலாம். பொது அறிவு வினாக்கள் சிரமமாக இருந்தது. குறிப்பாக தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், முக்கிய நடவடிக்கைகள் பற்றிய வினாக்கள் இருந்தன. இந்த முறை தேர்வு நன்றாக எழுதியுள்ளேன்.
ஜெயபிரவீனா, பி.இ., பட்டதாரி,கம்பம் :
குருப் 2 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு தமிழ், இயற்பியல், வேதியியல்| சமூக அறிவியல், கணிதம், பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டது. தமிழ் பாட வினாக்கள் எளிதாக இருந்தது.வேதியியல் பாடவினாக்கள் சற்று சிரமம். சமூக அறிவியலில் 'பூதலிங்கம் குழு எதனுடன் சம்பந்தப்பட்டது, 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுக்கும் சட்டப் பிரிவு' போன்ற வினாக்கள் சிரமமாக இருந்தது. இந்த தேர்வில் புதிதாக விடை எழுதிய விபரங்களை தனியாக எழுத வேண்டும் என்பதும், கேள்வியில் பதில் தெரியாதுஎன்றால் அதற்கு 'இ' என எழுத வேண்டும் என்ற விதியும் சிரமமாக இருந்தது.ஒவ்வொரு வினாவிற்கும் எழுதிய விடையை குறித்து எழுத வேண்டும். பெரும்பாலானவர்கள் இதில் குழம்பினர். மொத்தில் வினாக்கள் ஒருசிலவற்றை தவிர எளிதாக தான் இருந்தது.
"தினமலர் வெளியிட்ட மாதிரி வினா விடை பயனுள்ளதாக இருந்தது". - பத்திரிகை என்றால் இப்படி மாணவர்களுக்கும், மற்ற பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். வாழ்த்துக்கள் தினமலர் பத்திரிகை நிறுவனத்திற்கும், ஆசிரியர் குழுமத்திற்கும் மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி. தொரட்டும் உங்கள் மக்கள் மற்றும் மாணவர் நற்பணி.