கட்சியினருக்கு பளார் விட்ட லாலு மனைவி
பாட்னா; சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறிய சி.பி.ஐ., அதிகாரிகளை தடுத்த ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்களை, கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி தாக்கி, அதிகாரிகளை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ௨௦௦௪ - ௦௯ வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, அத்துறையில் பணி நியமனங்கள் செய்ததில், 1 லட்சம் சதுர அடி அளவுக்கு நிலங்களை லஞ்சமாக பெற்றதாக, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, லாலு, அவருடைய மனைவி மற்றும் மகள்களுக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். சோதனை நடப்பதை அறிந்த ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்கள், பாட்னாவில் உள்ள லாலு வீட்டின் முன் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். லாலு பிரசாத், டில்லியில்
உள்ளார். சோதனையின் போது, அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அவரது மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் தான் வீட்டில் இருந்தனர்.
சி.பி.ஐ., அதிகாரிகள், ௧௨ மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்திய பின், லாலு வீட்டிலிருந்து
புறப்பட்டனர். அவர்களை வழிமறித்து, ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்போது அங்கு வந்த ரப்ரி தேவி, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு வழிவிட தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், தொண்டர்கள் கேட்கவில்லை.
இதையடுத்து, அவர்களை கடுமையாக திட்டிய ரப்ரி தேவி, தொண்டர்கள் சிலரை அடித்து, அதிகாரிகளுக்கு வழி விடவைத்தார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
வாசகர் கருத்து (8)
சிபிஐ அதிகாரிகள் ஒரு வழியாக அவர்களே சோதனையை முடித்து கொண்டு கிளம்பும் போது அவர்களை தடுத்து நிறுத்தி ரிட்டர்ன் டிக்கெட் எடுக்க வைத்து வீட்டிற்குள் மீண்டும் சோதனையை தொடரசெய்யும் வகையில் திரும்பி அனுப்பும் அந்த தொண்டர்களின் குசும்பு ராப்ரி தேவியை கோபப்படுத்தியதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
இதே தமிழ் நாட்டில் நடந்திருந்தால், விஷயத்தை திருத்தி, அதிகாரிகள் கட்சி தொண்டர்களை அடித்ததாக புகார் செய்து இருப்பார்கள். நம்ம ஆளுங்களுக்கு 'நடிக்க' சொல்லித்தரவேண்டுமா??
அவங்களே அடிசிகிட்டு எங்கமேல வழக்கு போட்டுவாங்கன்னு திருமாவளவனின் திரியை பின்பற்றி இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பாரோ
புஷ்பாவின் தோழியா ..
தலைவி இப்படி இருக்க வேண்டும்.