Load Image
dinamalar telegram
Advertisement

ஆதார விலையில் மீன் கொள்முதல் செய்ய...திட்டம்:மீன்வளத் துறை அதிரடி முடிவு

Tamil News
ADVERTISEMENT
புதுச்சேரி:நெல்லுக்கு ஆதார விலை இருப்பதை போல, மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 45 கி.மீ., தொலைவிற்கு கடற்கரை பரப்பு உள்ளது.
இந்த கடற்கரையை ஒட்டியவாறு 50 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மீன் விற்பனை தொழிலில் நேரடியாகவும், அத் தொழில் சார்ந்தும் 1.50 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.மரம் மற்றும் இரும்பினால் ஆன விசைப்படகுகள் எப்.ஆர்.பி., மற்றும் கட்டுமரம் என மொத்தம் 3063 படகுகளில் தினமும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கடலில் ஆண்டுக்கு 33,902 மெட்ரிக் டன்கள் மீன், இறால், உள்நாட்டு நீர்நிலைகளில் 3,795 மெட்ரிக் டன் மீன், இறால் பிடிக்கப்படுகின்றன.புதுச்சேரியில் பிடிக்கப்படும் மீன்கள் மாநிலத்தின் தேவைகளுக்கு போக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. .
இருப்பினும் மாநிலத்தில் மீன்பிடி தொழிலில் வருமானம் நிலை இல்லாமல் உள்ளது.ஒரு நாள் மீன்கள் அதிகம் கிடைத்தாலும், மற்றொரு நாள் முதலுக்கு மோசம் ஏற்படுகிறது. செலவு செய்த டீசல் தொகைக்கு கூட மீன்கள் கிடைப்பதில்லை.மீன் வரத்து அதிகம் இருக்கும் காலங்களில், சில நேரங்களில் போதிய விலையும் கிடைப்பதில்லை. இதுபோன்ற நேரங்களில், நஷ்டத்தை தவிர்க்க கிடைத்தவரை லாபம் என வந்த விலைக்கு மீன்களை விற்கின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், புதுச்சேரி மீனவர்களுக்கு கைகொடுப்பதற்காக, நெல்லுக்கு ஆதார விலை இருப்பதை போல, மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய மீன்வளத் துறை திட்டமிட்டு உள்ளது. மீன் வரத்து அதிகம் இருக்கும்போது, நஷ்டம் ஏற்படாமல், மீனவர்கள் மீன்வளத் துறைக்கு ஆதார விலையில் விற்பனை செய்யலாம்.
இப்படி கொள்முதல் செய்யும் மீன்களை குளிர்சாதன கிடங்குகளில் கெடாமல் வைத்திருக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குளிர் சாதன கிடங்குகளை கணக்கெடுத்து பழுது பார்க்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.மாநிலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை, சமூக நலத் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை உள்பட தங்கும் விடுதிகள், ஹாஸ்டல்கள், காப்பகங்கள் பல உள்ளன. இந்த அரசு விடுதிகளில் அசைவ உணவாக மீன் குழம்பு உணவு பரிமாறப் படுவதில்லை.
தற்போது இந்த ஹாஸ்டல்களில் மீன் குழம்பு உணவு வழங்க மீன்வளத்துறை பரிந்துரை செய்ய உள்ளது. அத்துடன் மீன்களை தானே கொள்முதல் செய்து, ஹாஸ்டல், காப்பகங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.அத்துடன் 'பிரஷ்' மீன்களை துண்டுகளாக்கி, நவீன மீன் அங்காடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக பொதுமக்களுக்கு விற்கவும் திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகிறது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மகிழ்ச்சியான செய்தி வரவேற்போம்.அதேவேலையில் நாட்டின் முதுகெழும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயிகளின் உற்பத்திப்பொருட்கள் உதாரணத்திற்கு சிறு வெங்காயம்,தக்காளி காய்கறிகள் சில நேரங்களில் விவசாயிகளால் ஈடுசெய்யமுடியாதளவிற்கு விலைவீழ்ச்சி. இதை அரசு கவனத்தில்கொண்டு விவசாயிகளை பாதுகாக்கவேண்டும்.நூறு நாள் திட்டத்தையும் அளவுக்கதிகமான இலவச திட்டத்தையும் கைவிடுவது நல்லது.ஆக்கபூர்வமான தொலைநோக்குசிந்தனையுடன் செயல்படுங்கள். நேர்மையான உழழைப்பின் மூலம் வாழவேண்டும் என்ற உயரியகொள்கையை இளையதலைமுறையிடம் விதையுங்கள்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.

Advertisement