Load Image
dinamalar telegram
Advertisement

எம்.பி., சீட்டுக்கு துண்டு போடும் பா.ஜ.,

Tamil News
ADVERTISEMENT
''கால்நடையை கூட்டிண்டு நடையா நடக்கறா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''என்ன பிரச்னை பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில கால்நடைகள் அதிகம்கிறதால, 100க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனை, கிளை மருந்தகங்கள் செயல்படறது... இங்க கால்நடை உதவி டாக்டர், பராமரிப்பு ஆய்வாளர், உதவியாளர்கள் வேலை பாக்கறா ஓய்... ''இவாளுக்கு கார்த்தால 8:00ல இருந்து மதியம் 12:00 மணி; மதியம் 3:00ல இருந்து சாயந்தரம் 5:00 மணி வரை மட்டும் தான் வேலை... சுத்துப்பட்டு கிராமத்துல இருக்கறவா, வாடகைக்கு வண்டி பிடிச்சு சிகிச்சைக்காக ஆடு, மாடுகளை ஏத்திண்டு வந்தா, டாக்டர்கள் இருக்கறது இல்லை ஓய்...

''சாவகாசமா 11:00 மணிக்கு மேல தான் வரா... மதுரை மாவட்டத்துல பாதிக்கு பாதி டாக்டர்கள் இப்படி தான் இருக்கா ஓய்... ''கால்நடை பராமரிப்பு துறையில இப்பத்தான், 1,450 உதவி டாக்டர்களை நியமிச்சா... இதுல, மதுரையில மட்டும், 40 பேருக்கு, 'போஸ்டிங்' போட்டிருக்கா... புதுசா வந்தவாளுக்கும், 'ஓபி' அடிக்கற வியாதி தொத்திக்காம இருந்தா சரி தான் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஒருத்தரே பார்க்கிறதுக்கு பதிலா, மத்தவங்களுக்கும் பிரிச்சு குடுக்கலாமே பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''எதை பிரிச்சு குடுக்க சொல்றீங்க பாய்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சென்னை ஐகோர்ட்ல, அரசு வக்கீல்களுக்கு தனி ஆபீஸ் இருக்குது... இங்க தான், 'லீகல் ஒப்பீனியன்' கேட்டு பல துறையினரும் மனு போடுவாங்க பா... ''அதாவது, 'அரசு ஊழியர்களுக்கு வர வேண்டிய சலுகை, பணி நீக்கம் ரத்து, பதவி உயர்வு'ன்னு பல வழக்குகள்ல ஐகோர்ட் உத்தரவு போடுதுல்ல... 'இந்த உத்தரவுல மேல்முறையீடு செய்யலாமா, செஞ்சா ஜெயிக்குமா, இல்ல அந்த உத்தரவையே அமல்படுத்திடலாமா'ன்னு, அரசு வக்கீல்கள், 'ஒப்பீனியன்' குடுக்கணும் பா...

''இப்ப, அரசு பிளீடர் மட்டும் தனி ஆளா எல்லாத்தையும் பார்த்து, 'ஒப்பீனியன்' குடுக்கிறார்... கோர்ட்டுக்கும் போயிட்டு, இதையும் பார்க்கிறது லேசுபட்ட வேலை இல்லை... இதனால, மனுக்கள் தேங்கி கிடக்குது பா... ''போன ஆட்சியில, 'சென்சிட்டிவ்' கேஸ்களுக்கு மட்டும், அரசு பிளீடர், 'ஒப்பீனியன்' சொல்லிட்டு, மீதி மனுக்களை மத்த அரசு வக்கீல்களுக்கு பிரிச்சு அனுப்பிடுவாரு... 'அந்த மாதிரி, எல்லாருக்கும் பிரிச்சு குடுத்துட்டா பிரச்னை தீர்ந்துடும்'னு வக்கீல்கள் பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கல்லை எறிஞ்சு பார்ப்போம்னு முடிவு செஞ்சிருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தி.மு.க., கூட்டணியில, 18 எம்.எல்.ஏ.,க்களோட இருக்கிற காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியிருக்காங்கல்லா... 'அதே மாதிரி, நாலு எம்.எல்.ஏ.,க்கள் வச்சிருக்கிற நாமும், அ.தி.மு.க.,விடம் ஒரு ராஜ்யசபா சீட் கேட்போம்'னு பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் நிர்வாகிகள் வலியுறுத்துதாவ வே...

''ஒருவேளை குடுத்தா, அண்ணாமலை, துணைத் தலைவர் கனக சபாபதி, பொதுச் செயலர் முருகானந்தம் பெயர்களை பரிசீலிக்க வாய்ப்பிருக்குன்னு கமலாலயத்துல பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''சரி, வாரும்... மத்தவாளுக்கும் சீட் வேணுமோல்லியோ...'' என சிரித்தபடியே குப்பண்ணா எழ, பெஞ்ச் காலியானது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நாலு பிரதிநிதிகளை அனுப்பியதும் ரா. ச சீட்டுக்கு மோதலா? ரொம்பவே பேராசை

  • SKANDH - Chennai,இந்தியா

    அடித்து விரட்டுங்கப்பா இந்த பகல் கொள்ளைக்காரர்களை. 4 MLA சீட்டே அதுங்களுக்கு அதிகம் தான்.

  • John Miller - Hamilton,பெர்முடா

    எந்த பதவியிலும் இல்லாத, எந்த பலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு நாயாக உழைத்த தங்க தலைவி, புதுமை செல்வி, பத்தரை மாத்து தங்கம் அண்ணி காயத்ரி ரகுராம் அவர்களுக்கே எம்பி பதவி கொடுக்க வேண்டும்.

Advertisement