Load Image
dinamalar telegram
Advertisement

விலைவாசி உயர... மாமூலும் உயரும்!

Tamil News
ADVERTISEMENT
''ஆளுங்கட்சியினருக்கும் அதிகாரிக்கும், 'லடாய்' முத்திடுச்சுங்க...'' என அந்தோணி சாமி ஆரம்பிக்கும்போதே, சுடச்சுட மெது வடைகளுடன் வந்தார், நாயர்.

அதை கடித்தபடியே, ''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஊராட்சி ஒன்றிய பெண் அதிகாரிக்கும், தி.மு.க., சேர்மன் விஜயலட்சுமிக்கும் ஏழாம் பொருத்தமுங்க... ''சேர்மனையே, அதிகாரி ஒருமையில தான் கூப்பிடுறாங்க... 15வது நிதிக்குழுவுல ஒதுக்கப்பட்ட திட்டப் பணிகளை, ஏதேதோ காரணம் சொல்லி, 10 மாசமா அதிகாரி நிறுத்தி வச்சிருக்காங்க...

''ஏற்கனவே செஞ்சு முடிக்கப்பட்ட பணிகளும் சரியில்லைன்னு சொல்லி நிதியை, 'ரிலீஸ்' பண்ணலை... புதிய, 'டெண்டர்' அறிவிப்புக்கும் முட்டுக்கட்டை போடுறாங்க... ''தி.மு.க., மாவட்டச் செயலர் செங்குட்டுவன், 'பஞ்சாயத்து' செஞ்சும் உரசல் தீரலை... 'சட்டத்துக்கு புறம்பான வேலைகளை சேர்மன் செய்ய சொல்றாங்க'ன்னு உயர் அதிகாரிகளுக்கு பெண் அதிகாரி புகார் அனுப்பிட்டாங்க... இவங்க சண்டையால வளர்ச்சிப் பணிகள் கிடப்புல கிடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

மொபைல் போனை எடுத்துப் பார்த்த அண்ணாச்சி, ''அருள்மொழி மேடம், 'மெசேஜ்' பண்ணியிருக்காங்க...'' என்றபடியே, ''இழந்த இடத்தை பிடிச்ச பெண் அதிகாரி கதையை கேளுங்க வே...'' என்றபடியே தொடர்ந்தார்...

''போன வருஷம், வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்குச்சுல்லா... போதாக்குறைக்கு ஆந்திராவுல இருந்தும் வெள்ளமும் வந்துட்டு... இதனால, திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆத்துல அங்கங்க கரை உடைஞ்சிட்டு வே... ''இதை தற்காலிகமா தடுக்க மணல் மூட்டைக்கு பதிலா, நிலக்கரி சாம்பல் மூட்டைகளை அடுக்கினாவ... மூட்டை யெல்லாம் பிய்ச்சிக்கிட்டு போயி மக்கள் அவஸ்தைப்பட்டாவ... இதுல பெரிய முறைகேடு நடந்தது வெட்ட வெளிச்சமாயிட்டு வே...

''முறைகேடுக்கு காரணமான ஆரணியாறு கோட்ட பெண் அதிகாரியை திருவண்ணாமலைக்கு துாக்கி அடிச்சிட்டாவ... உத்தரவு வந்து அஞ்சு மாசமாகியும், அந்தம்மா திருவண்ணாமலைக்கு போவலை... பழைய இடத்துலயே வேலை பார்த்தாங்க வே... ''இப்ப, அந்தம்மா பழைய இடத்துலயே பணியை தொடர்வாங்கன்னு, 'ஆர்டர்' வந்துட்டு... இதுக்காக, துறையின் முக்கிய புள்ளியின் உதவியாளருக்கு பெரும் தொகை கைமாறியிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

''உமாபதி இப்படி உட்காருங்கோ... ஆத்துல, ஜெயகுமாரி சவுக்கியமா...'' என, நண்பரிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''விலைவாசி உயர்ந்துடுத்துன்னு சொல்லி, எதை எதை உயர்த்தணும்னு விவஸ்தை வேண்டாமோ ஓய்...'' என, தலையில் அடித்துக் கொண்டார்.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பெரம்பலுார் மாவட்டம், கோனேரிபாளையம் பிரிவு பாதையில இருந்து, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு நடுவுல பெட்ரோல் பங்க் ஒண்ணு இருக்கு... இங்க டிராபிக் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் நின்னுண்டு, அந்த வழியா போற லாரிகளை மடக்கி வசூலை போடுவார் ஓய்...

''வழக்கமா லாரிக்கு 200 ரூபாய் தான் வசூலிச்சுண்டு இருந்தார்... இப்ப, 500 ரூபாய் ஆக்கிட்டார்... 'என்ன திடீர்னு ரேட்டை ஏத்திட்டேள்'னு டிரைவர்கள் கேட்டா, 'விலைவாசி உசந்துடுத்தோல்லியோ... அதான்'னு அசால்ட்டா பதில் சொல்றார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''வேல்முருகன் ஊருக்கு வந்துட்டாரு தெரியுமாவே...'' என அண்ணாச்சி கேட்க, அரட்டை திசை திரும்பியது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • DVRR - Kolkata,இந்தியா

    விலைவாசி உயர... மாமூலும் உயரும் - 100% சரி

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒவ்வொரு முறையும் லஞ்சம், ஊழல் என்றால் சும்மா ஒரு மாற்றல்…. எனக்கு வரவேண்டியதைக் கொடுத்து ரத்து செய்__என்பதுதான் சங்கேதம் இதுதான் 'திராவிட மாட்டல் '

Advertisement