Load Image
dinamalar telegram
Advertisement

2ம் இடத்தை பிடிக்க அமைச்சர்கள் போட்டி!

Tamil News
ADVERTISEMENT
''பதவி உயர்வு கிடைச்சும், பணியில சேர விடமாட்டேங்கறா ஓய்...'' என, 'பில்டர்' காபியை பருகியபடியே பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''யாருக்கு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''முதுகுளத்துார் பி.டி.ஓ., ராஜேந்திரனை ஜாதி பேர் சொல்லி திட்டினதுக்காக, அமைச்சர் ராஜ கண்ணப்பனை துறை மாத்தினாளோல்லியோ... அந்த பி.டி.ஓ., ராஜேந்திரனுக்கு சிவகங்கை மாவட்ட புத்தாக்க திட்ட உதவி இயக்குனரா, போன மாசம் பதவி உயர்வு குடுத்தா ஓய்...

''அவருடன் பதவி உயர்வு கிடைச்ச 59 பேரும், அடுத்த நாளே பணியில இருந்து விடுவிக்கப்பட்டு, புது இடத்துல, 'ஜாயின்' பண்ணிட்டா... ராஜேந்திரனை மட்டும் இன்னும் விடுவிக்காம இருக்கா ஓய்...

''கலெக்டர்கிட்ட கேட்டா, 'சென்னை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் ஆபீஸ்ல இருந்து நிறுத்தி வைக்க சொல்லி உத்தரவு வந்துருக்கு'ன்னு சொல்றார்... 'ஊராட்சி ஒன்றியங்கள்ல அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எல்.இ.டி., தெருவிளக்கு போட்டதுல, கணக்கு - வழக்கு சரியில்லைன்னு அஞ்சு பி.டி.ஓ., மேல புகார் இருக்கு... அதுல ராஜேந்திரன் பேரும் இருக்கு'ன்னு சொல்றா ஓய்...

''அதே நேரம், 'முறைகேடு புகார்ல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை, பதவி உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது'ன்னு நீதிமன்ற உத்தரவே இருக்காம்... 'ராஜேந்திரன் விஷயத்துல, அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்'னு சக அதிகாரிகள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மூவரணி அடுத்த அதிரடியை ஆரம்பிச்சிட்டாவ வே...'' என, வேறு தகவலுக்கு தாவிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''ம.தி.மு.க., தலைமை நிலைய செயலரா வைகோ மகன் துரையை நியமிச்சதுக்கு கடுமையா எதிர்ப்பு தெரிவிச்ச, மூத்த மாவட்டச் செயலர்கள் செங்குட்டுவன், புலவர் செவந்தியப்பன், சண்முகசுந்தரம் ஆகியோரை கட்சியில இருந்து, 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்கல்லா...

''அவங்க மூணு பேரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிட்டாவ... 'கட்சிக்கு அசையும் சொத்து எவ்வளவு, வங்கியில எவ்வளவு பணம் இருக்கு, எந்தெந்த வங்கியில கணக்கு வச்சிருக்கீய'ன்னு எல்லா விபரத்தையும் விலாவரியா தரும்படி, கட்சி தலைமையிடம் கேட்டு கடிதாசி அனுப்பியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''அமைச்சர்கள் மத்தியில போட்டா போட்டி உருவாகிடுச்சுங்க...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், அந்தோணிசாமி.''விபரமா சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.

''முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான அமைச்சர்கள் யாருங்கிற போட்டியில, எ.வ.வேலு, நேரு, தங்கம் தென்னரசுன்னு மூணு அமைச்சர்கள் முன்னணியில இருக்காங்க..

.''கட்சியிலயும், பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு அடுத்தபடியா, இரண்டாம் கட்ட தலைவர் என்ற அந்தஸ்தை கைப்பற்ற, இந்த மூணு அமைச்சர்கள் மத்தியில போட்டா போட்டி நிலவுதாம்...

''ஆட்சிக்கு வர்றதுக்கு முன்ன, இந்த மூணு அமைச்சர்களும், 'முஸ்தபா... முஸ்தபா'ன்னு பாடாத குறையா நட்பு பாராட்டினாங்க... இப்ப என்னடான்னா, 'வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்'னு பாடாத குறையா, தங்களது இலக்குல குறியா இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement