தமிழகத்தின் கால் நுாற்றாண்டு அரசியல் சரித்திரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த இல்ல திறப்பு விழா நடந்து 50 ஆண்டுகள் ஆகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் நினைவிடமாக இருந்த வேதாநிலையம் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேதா நிலைய கிரகபிரவேசத்தின் போது ஜெயலலிதா அனுப்பிய அழைப்பிதழை ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர் வள்ளிநாயகம் நினைவு கூர்ந்துள்ளார்.
இவரது மனைவியின் பெரிய தாத்தா நடிகர் எஸ்.வி.சுப்பையாவுக்கு கிரகபிரவேச அழைப்பிதழை ஜெயலலிதா அனுப்பியுள்ளார். அழைப்பிதழுக்கு முன் தனிப்பட்ட முறையில் கடிதமும் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:1972 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி எனது புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்ள உங்களை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன். இது தேதியை முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிப்பதற்காகத் தான் இந்த கடிதம். இதனால், உங்கள் நிகழ்ச்சி அட்டவணையை அதற்கேற்ப மாற்றிக் கொண்டு கலந்து கொள்ள வசதியாக இருக்கும். உங்களது வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதோடு, அந்தச் சந்தர்ப்பத்திற்கு அருளையும் கண்ணியத்தையும் சேர்க்கும். இன்னும் சில நாட்களில் முறையான அழைப்பு வரும்.இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கடந்து வந்த பாதை:
எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் நடித்த ஜெயலலிதா அடுத்த இரண்டு ஆண்டுகளில் போயஸ் கார்டனில் உள்ள இடத்தை ஜெயலலிதாவும், அவரது தாய் சந்தியாவும் இணைந்து 1967ல் வாங்கினர். அப்போது அதன் மதிப்பு 1.32 லட்ச ரூபாய். அந்த இடத்தில் வீடு கட்டி, பெற்றோர் நினைவாக ‛வேதா நிலையம்' என ஜெயலலிதா பெயர் சூட்டினார். இங்கு தான் தமிழகத்தின் கால் நுாற்றாண்டு சரித்திரம் எழுதப்பட்டது என்றால் மிகையல்ல.
எம்.ஜிஆருக்கு பின் அ.தி.மு..க,வின் நிரந்தர பொதுச் செயலர் ஆன ஜெயலலிதா, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை வேதா நியைத்தில் தான் சந்தித்தார். 24ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டு இந்த வீட்டின் மதிப்பு தற்போது, 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் நினைவிடமாக்க அப்போதைய அ.தி.மு.க., அரசு முயன்றது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி, வேதா இல்லம் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு சொந்தமாகியுள்ளது.
நமது நிருபர் -
என்னங்க....ஒரு வீட்டு கட்டடத்துக்கு பொன்விழாவா?.....அந்த வீடு அதிமுக வுக்கு சொந்தமும் கிடையாது.....வீட்டு பக்கத்தில போயி அமைதியா உட்கார்ந்துட்டு திரும்பியாச்சி...இப்படியே தலைவியோடு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு விழா எடுங்க....அடுத்த தேர்தலுக்கு சரியா நேரம் வந்துரும்....