திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபுர மலை குவாரிக்கு தடை
சென்னை : திருவண்ணாமலை மாவட்டத்தில், கோபுர மலையில் கல் குவாரிக்கு அனுமதி வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
போளூர் தாலுகா, புதிரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, கே.வீரப்பன் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில், கோபுர மலை உள்ளது. வருவாய் ஆவணங்களில், மலை, மலை புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கோபுர மலையைச் சுற்றி, பழமையான சின்னங்கள் உள்ளன. விஜயநகர பேரரசு தொடர்பான சின்னங்கள் உள்ளன.கைவினை தொழிலுக்காக, சுய உதவி குழுக்களுக்கு, குவாரி உரிமம் வழங்கப்பட்டது.
இயந்திரங்களை பயன்படுத்தி, வெடி வைத்து, மலையை உடைக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், நிபந்தனைகளை மீறி, சிவகுமார் என்பவருக்கு உள்குத்தகைக்கு விட்டுள்ளனர்.சட்டவிரோதமாக, வெடி வைத்து மலையை உடைக்கின்றனர். அதிக அளவில் குவாரி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம், இதை கண்காணிப்பது இல்லை. எனவே, சட்டவிரோத குவாரியை தடுக்க வேண்டும். குவாரி உரிமம் வழங்க, கலெக்டருக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆனந்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் அளிக்க, சிறப்பு பிளீடர் பிந்திரன் 'நோட்டீஸ்' பெற்று கொண்டார். மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு, குவாரி உரிமம் வழங்க, மாவட்ட கலெக்டருக்கு, நீதிபதிகள் தடை விதித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!