செய்திகள் சில வரிகளில்...
3 வயதுக்கும் அரை டிக்கெட்
பெங்களூரு: கர்நாடகாவில் 6 - 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மட்டுமே அரசு பஸ்களில் அரை டிக்கெட் வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவிப்பு இன்றி, திடீரென மூன்று வயது முதலே அரை டிக்கெட் வாங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. டிக்கெட் வாங்க எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோருக்கு, அவர்களது குழந்தைகளை நிற்க வைத்து, 3 அடி, 4 அடி உயரத்துக்கு சரிபார்க்கப்படுகிறது.
மடாதிபதியாக இன்று பதவியேற்பு
பெங்களூரு: பெங்களூரு நகரூர் கிராமத்தில் உள்ள காணிகா சமுதாயத்துக்குட்பட்ட தைலேஸ்வரா மஹா சமஸ்தான காணிகா மடத்தின் மடாதிபதியாக பி.ஜே.புட்டசாமி இன்று பதவியேற்கிறார். பா.ஜ., தலைவரான இவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர். 83 வயதாகும் இவர், வாழ்க்கையின் இறுதி நாட்களை ஆன்மிகத்தில் கழிக்க மடாதிபதியாக மாறியுள்ளார்.
இறைச்சி விற்பனைக்கு நாளை தடை
பெங்களூரு: நாடு முழுதும் நாளை புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நாளை பிராணி வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனைக்கும் பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கலாசார நிகழ்ச்சிக்கு கவர்னர் அழைப்பு
பெங்களூரு: செயின்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின், 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். கல்வி, விளையாட்டுடன் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை வழங்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கின்னஸ் சாதனை மருத்துவ முகாம்
சிக்கபல்லாபூர்: சுகாதார துறை அமைச்சர் சுதாகரின் சொந்த மாவட்டமான சிக்கபல்லாபூரில், நேற்று மெகா இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழ் அமைச்சர் சுதாகரிடம், நேற்று மாலை வழங்கப்பட்டது.
அமைச்சருக்கு 'திருஷ்டி' சுற்றி போட்ட பெண்
பெங்களூரு: உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா, தன் சொந்த தொகுதியான மல்லேஸ்வரத்தில் நேற்று பாதயாத்திரை நடத்தி மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். திரிவேணி சாலையில் சென்ற போது, வயதான பெண் ஒருவர், தன் சேலை மூலம் அமைச்சருக்கு 'திருஷ்டி' சுற்றி போட்டார். அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்.
முதல்வரின் நெகிழ்ச்சி நிகழ்வு
பெங்களூரு: மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் இருந்து முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று வெளியே வந்த போது, கொப்பால் மாவட்டம், கனககிரி தொகுதியின் அடபாவி கிராமத்தின் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சிவப்பா என்ற மாற்றுத்திறனாளி முதல்வரிடம் பேசினார். தன்னுடைய மூன்று சக்கர ஸ்கூட்டர், விபத்தில் பழுதானது. உதவும்படி கோரினார். உடனே கொப்பால் மாவட்ட கலெக்டரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட முதல்வர், ஸ்கூட்டர் வழங்கும்படி உத்தரவிட்டார்.
கொரோனா உதவி எண் மாற்றம்
பெங்களூரு: பெங்., மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தின் கொரோனா குறித்த உதவிக்கு புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் 73384 64915 என்ற மொபைல் போன் எண் வாயிலாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, கொரோனா சம்பந்தமான தகவலை பெறலாம், என மாநகராட்சி சுகாதார அதிகாரி சிவகுமார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலக மாரத்தான் போட்டி
பெங்களூரு: கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் இருந்து டி.சி.எஸ்., உலக 10 கி.மீ., மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது. திறந்த வெளி பிரிவு அதிகாலை 5:30 மணிக்கும்; மகளிர் பிரிவு 7:10 மணிக்கும்; ஆடவர் பிரிவு 8:00 மணிக்கும்; மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் பிரிவு 8:05 மணிக்கும்; மஜா ரன் பிரிவு 8:50 மணிக்கும் ஆரம்பமாகிறது.இதை ஒட்டி நடந்த பாஸ்தா உணவு தயாரிக்கும் நிகழ்ச்சியில், மைசூரு உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர், கர்நாடக ஒலிம்பிக் அசோஷியேஷன் தலைவர் கோவிந்த்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!