புதுச்சேரி : ஆதரவற்ற குழந்தைகளுக்காக 13 இடங்களில் தற்காலிக தங்குமிடம், சிறுவர் கண்காணிப்பு இல்லங்களை அமைக்க மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இறங்கியுள்ளது.புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடிப்படை வசதிகள் இன்றி அடுத்த வேளை உணவுக்கு கையேந்த வேண்டிய நிலையில் உள்ள இந்த குழந்தைகள், பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இக்குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த, மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறையின் கீழ் புதுச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு சொசைட்டி ஏற்படுத்தப் பட்டுள்ளது.இக்கமிட்டி, போக்குவரத்து சிக்னல், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலையோர குழந்தைகளை மீட்டு நல்வழிப்படுத்தி, அவர்கள் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் மீட்கப்படும் ஆதரவற்ற குழந்தை களுக்காக நான்கு பிராந்தியங்களிலும் 13 இடங்களில் தற்காலிக தங்குமிடம், சிறுவர் கண்காணிப்பு இல்லங்களை அமைக்க, மகளிர் குழந்தை மேம்பாட்டுத் துறை தற்போது முடிவு செய்துள்ளது.இதற்காக தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை http://wcd.py.gov.in என்ற இணையதளத்தில் வரவேற்றுள்ளது.
இந்த திட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தொண்டு நிறுவனங்கள், வரும் 20ம் தேதி மாலை 5.௦௦ மணிக்குள் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பலாம்.ஆதரவற்ற குழந்தைகளுக்கான தற்காலிக தங்குமிடங்கள் புதுச்சேரியில் ஒன்று, , காரைக்கால், ஏனாம், மாகி பிராந்தியங்களில் தலா இரண்டு என மொத்தம் ஏழு அமைக்கப்பட உள்ளது.இதேபோல் சிறுவர் கண்காணிப்பு இல்லங்களை பொறுத்தவரை காரைக்கால், மாகி, ஏனாமில் தலா இரண்டு என ஆறு அமைக்கப்பட உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!