கொடைக்கு அழகூட்டும் மலர்கள்
கொடைக்கானல் : மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் பசுமை போர்த்திய வனங்களும், மலைகளும் தனி அழகுதான். அவ்வப்போது தரையிறங்கும் மேகக்கூட்டம், சில்லிடும் சாரல் மழை, குளுகுளு சீசன் என ஒரு வித மனபாரத்தில் இருப்போரை புத்துணர்ச்சியளித்து தெளிவுபடுத்துவது தான் கொடைக்கானல். இங்குள்ள பிரையன்ட் பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து பயணிகளின் மனதை கொள்ளை அடிப்பது தனி சிறப்பு.இதில் வண்ண மலர்களின் பல்வேறு பரிணாமங்கள் பார்ப்போரை சுண்டி இழுப்பது மட்டுமல்ல, இங்கேயே இருந்து விடலாமே என்ற எண்ணத்தை துாண்டுகிறது. இன்னும் சில வாரங்களில் கோடை விழா மலர் கண்காட்சியில் பூத்து சிரிக்கும் மலர்கள் பயணிகளை பரவசப்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இரு ஆண்டுகளாக கொரோனாவால் சீசன் ரத்து செய்யப்பட்ட போதும், தங்கள் பணியை இனிதே செய்துள்ளது பிரையன்ட் பூங்கா. நுாற்றுக்கும் மேற்பட்ட வகை மலர்கள் 6 மாதங்களுக்கு முன்னரே நடவு செய்யப்பட்டு, தற்போது அழகு மிளிர அகம் மலர்ந்து பூத்துக் குலுங்குகிறது. மலர்களின் பூமி போன்று ... சோலை ராஜன், மருந்து விற்பனை பிரதிநிதி, கோயம்புத்துார் : தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள கொடைக்கானல் வந்தோம். ஆனால் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்கள் தங்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு பூத்துள்ள பூக்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு அழகுடன் உள்ளது. இங்கேயே தங்கி விடலாம் என்ற அளவிற்கு மலர்களின் பூமி போன்று பூங்கா உள்ளது. தோட்டக்கலைத் துறையின் பணி அளப்பரியது. மலர் கண்காட்சிக்கு இங்கு வந்து ரசிக்க காத்திருக்கிறோம். சில்லிடும் சீதோஷ்ணம் நிலை மனதை வருடியது. மொத்தத்தில் பிரையன்ட் பூங்கா சூப்பரோ சூப்பர். காண கிடைக்காத ரகங்கள் தர்ஷனா, மாணவி, திண்டுக்கல் : பல வண்ணங்களில் பூத்து உள்ள இந்த ரகங்கள் வேறு எங்கும் காணக் கிடைக்காத வகையாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளில் மனங்களை கவர்ந்துள்ளன. ஒவ்வொரு பூக்கள் மூலம் இங்கு பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது.குழந்தைபோல் வளர்க்கிறோம் சுரேஷ், பூங்கா பராமரிப்பாளர்: 6 மாதத்திற்கு முன் நாற்று விதைகளை தேர்வு செய்து நான்கு கட்டமாக மலர் நாற்றுகளை நடவு செய்து ஒரு குழந்தையை போல் பராமரித்து வருகிறோம். சீசன் பூ, குழித்தட்டு செடி, ரோஜா செடிகளில் கவாத்து, கண்ணாடி மாளிகையில் உள்ள தொட்டி செடிகள், செடிகளால் தாவர உருவங்கள் உருவாக்கப்படுதல், தரையில் குரோட்டன்ஸ் மூலம் உருவங்களை உருவாக்கும் பல்வேறு யுக்திகளை கடைபிடித்து பூங்காவை சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு அம்சமாக மாற்றி உள்ளோம். சூழ்நிலைக்கேற்ப கவனிப்பு கோபுராஜ் ,பூங்கா பராமரிப்பாளர்: நுாற்றுக்கும் மேற்பட்ட வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு அவ்வப்போது தேவையான தண்ணீர் ,ஊட்டச்சத்து, நுண்ணூட்டங்கள், களையெடுப்பு உள்ளிட்டவற்றை பணியாளர்கள் மூலம் உற்றுநோக்கி கவனித்து வருகிறோம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு இவற்றை கவனித்ததால் இவை சிறப்பாக வளர்ந்து தற்போது நன்கு பூத்துள்ளது. கோடை விழா, மலர் கண்காட்சிக்கு இவை சிறப்பாக வளர்ந்து உள்ளது.மலர் கண்காட்சிக்கு தயார் சிவபாலன், தோட்டக்கலை அலுவலர்: மே மாதத்திலிருந்து பூக்கத் துவங்கும் மலர்களும், அடுத்தகட்டமாக மலரும் மலர்கள் , ஆண்டு முழுமையும் பூக்கும் பூ என பிரித்து நடவு செய்தோம். பூங்காவில் பொழுதுபோக்கு அம்சங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செல்பி ஸ்பாட், தாவர உருவங்கள், நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட லில்லி, துவக்கத்தில் 15 ஏக்கர் பரப்பில் இருந்த பூங்கா 20 ஏக்கராக மாற்றி சிறந்த பொழுதுபோக்கு தலமாக அமைத்துள்ளோம். பனி, மழை, வெயில் உள்ளிட்ட சீசனில் இருந்து காக்க பிரத்யேக வழிமுறைகளை கையாண்டு பராமரித்து வருகிறோம். கோடை விழா ,மலர் கண்காட்சிக்கு தயார் நிலையில் உள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!