பாதி ஏரி பாழான பின் பொதுப்பணித் துறை கண்விழிப்பு! நடவடிக்கை எடுப்பதாக உறுதி;
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ள வெங்கத்துார் ஏரியின் மொத்த நீர்பிடிப்பு பகுதியில், 50 சதவீதம் ஆக்கிரமிப்பில் பிடியில் சிக்கி உள்ள நிலையில், ஏரியை ஆய்வு செய்து சீரமைக்க இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இது, வெங்கத்துார் ஊராட்சி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஏரியில் நீர் பிடிப்பு பகுதியிலும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, 150 ஏக்கர் பரப்பு பகுதிகளில் குடியிருப்புகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாறியுள்ளது.இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள், தமிழக முதல்வர் உட்பட துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் வெங்கத்துார் ஏரியை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெங்கத்துார் ஏரியில் பெருமளவு நீர் பிடிப்பு பகுதி, குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது. மேலும், இந்த ஏரியானது மேற்பகுதியில் அமைந்துள்ள அதிகத்துார் ஏரியின் உபரி நீர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து பெறப்படும் மழை நீரினால் நிரம்புகிறது.மேற்படி ஏரியில் நீர்பரப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவைகளை அகற்றவும், எல்லை கற்களை நடவும், திருவள்ளூர் வட்டாட்சியருக்கு, நில அளவை செய்ய வேண்டி, இத்துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வருவாய் துறையின் மூலம், நில அளவை பணிகள் முடிந்து, எல்லை நிர்ணயம் செய்யப்பட்டவுடன், அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளும், வருவாய் துறையோடு இணைந்து, அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்தார்.மேலும், கூவம் ஆற்றின் குறுக்கே, அதிகத்துார் எல்லையில், புதிய தடுப்பணை அமைக்க, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் அரசாணை பெறப்பட்டவுடன், தடுப்பணை அமைக்கும் பணிகள் துவங்கி முடிவுறும்போது, வெங்கத்துார், அதிகத்துார் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள
சென்னை பெருநகர மேலாண்மைக் குழு மூலம் வெங்கத்துார் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தால், கரைகள் பலப்படுத்துதல், வரவுக் கால்வாய் மற்றும் மிகை நீர் கால்வாய் சீரமைத்தல் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ளவும், அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.மேலும், வெங்கத்துார் ஏரியில் கழிவு நீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18)
மீதி உள்ள ஏரியும் பாழாப்போனபின்பு அந்த இடத்தை நிரப்பி, பிளாட் போற்று விற்கலாம் என்று பார்த்தார்கள். அதற்குள் விவசாயிகள் பிரச்சினையை எழுப்பி, அப்படி நடக்க விடாம செஞ்சிட்டாங்க.. பாவம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள்.
…..
ஒன்னியும் ஆவாது
முதலில் நகரின் நடுவிலுள்ள அதிக விலைமதிப்பு வாய்ந்த ஆதம்பாக்கம் ஏரி மற்றும் அம்பத்தூர் ஏரிகளை கவனித்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
…….
மிச்சமிருப்பதையும் விடியலின் அறிவுறுத்தலின் பெயரில் கட்டிங் கமிஷனுக்கு முடிச்சிருவானுங்க