கடலுார் : கடலுார் அடுத்த எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.கடலுார் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அவர்கள், குண்டு சாலை, அரசு மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.பின், எம்.புதுார் பகுதியில் கடலுார் புதிய பஸ் நிலையத்தை அமைப்பதற்காக, இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அமைச்சர் கூறுகையில், 'கடலுார் மாநகரில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் வடிகால் பணியில், அனைத்தும் இடங்களிலும் சாலை மட்டத்தை விட 2 அடி உயரமாக கட்டப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பருவ மழை தொடங்குவதற்குள் அடுத்த 2 மாதங்களில் வடிகால் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோரம் தேங்கி உள்ள கழிவுநீரும் அப்புறப்படுத்தப்படும். குப்பைகள் அகற்ற உரிய தீர்வு காண்பதுடன், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்.கடலுார் பஸ் நிலையம் போதிய இடவசதியின்றி நெருக்கடியுடன் இயங்கி வருவதால், புதிய பஸ் நிலையம் அமைக்க எம்.புதுார் பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது' என்றார்.ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், மாநகராட்சி மேயர் சுந்தரி, நகர செயலாளர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
T கட்சிக்காரர்கள் நிறைய இடம் வாங்கிய பின் அதற்கு அருகில் பேருந்து நிலையம் வரும்