குருப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் துவங்கியது
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் குருப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் துவங்கியது.சங்கராபுரம் வட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் முலம் குருப் 4 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி முகாம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
முகாமை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தொடங்கி வைத்து பேசுகையில், 'சங்கராபுரம் தாலுகா பின் தங்கியுள்ளது. இப்பகுதியில் படித்த வேலை இல்லா இளைஞர்கள் அதிகம் உள்ளதால் மாணவ, மாணவியர்கள் அரசு தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று சங்கராபுரத்தில் முகாம் துவங்கப் பட்டுள்ளது.சென்னை பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அகாடமி சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை முதல் மாலை வரை பயிற்சி அளிக்கப்படும்.தேர்விற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளன.
குறிக்கோலுடன் தினசரி 7 முதல் 8 மணி நேரம் படித்தால் அனைவரும் தேர்ச்சி பெறலாம். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் அரசு பணிக்கு வர வேண்டும்' என்றார். பி.எல்.ராஜ் அகாடமியைச் சேர்ந்த மலர் மன்னன், யோகேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 75 பேர் பங்கேற்றனர். தாசில்தார் பாண்டியன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் செங்கதிர் பேசினர். வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், துணை தாசில்தார்கள் மாரியாபிள்ளை,ராமமுர்த்தி, வருவாய் ஆய்வாளர் திருமலை பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!