சென்னை : 'முந்தைய அரசுகள் எடுத்த முடிவுகள், மக்கள் நலனுக்கு பாதகமாக இருந்தால், அதை பிந்தைய அரசு மறு ஆய்வு செய்யலாம்; அனைத்து முடிவுகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டியதில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் சென்ராயன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஏற்காடு தாலுகா, செம்மடுவு கிராமத்தில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்க, 4.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

உத்தரவு
பொதுப்பணித் துறை அளித்த செலவு மதிப்பீடு 61.80 கோடி ரூபாய்க்கு, அரசு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. முதல் தவணையாக, 2021 ஜனவரியில் 15 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை, கட்டு மானப் பணிகளை நிறுத்தும்படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் செல்வேந்திரன் ஆஜராகி வாதாடியதாவது:கொடைக்கானலில், 20 ஏக்கர் பரப்பில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய அளவில் மையம் அமைக்க, கொள்கை முடிவெடுக்கப்பட்டது. ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொள்கை முடிவு
இதையடுத்து, அரசு உத்தரவை ரத்து செய்து, ஏற்காட்டில் பயிற்சி நிறுவன கட்டுமானப் பணிகளை தொடர உத்தரவிடும்படி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:ஏற்காட்டில் பயிற்சி நிறுவன கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு, துறை மட்டத்தில் எடுக்கப்பட்டது அல்ல; முதல்வர் தலைமையில் நடந்தஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, கொள்கை முடிவாக தான் கருத வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், முந்தைய அரசு எடுத்த முடிவை, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு மறு ஆய்வு செய்ய முடியும். மறு ஆய்வு செய்யும் போது, முந்தைய அரசு எடுத்த முடிவின்படி செலவிடப்பட்ட திட்டத்தை வீண் போக அனுமதிப்பதா அல்லது பொது மக்களுக்கு வேறு விதத்தில் பயன்படுத்துவதா என்பதை, மனதில் கொள்ள வேண்டும்.அரசினர் தோட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகத்தை, பழைய இடத்துக்கே மாற்றுவது என, 2011ல் இருந்த அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவில் குறுக்கிட, இரு நீதிபதிகள் அமர்வு மறுத்து விட்டது.சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தை, அரசினர் தோட்டத்தில் கட்டுவதற்காக, 1,100 கோடி ரூபாய் செலவிடப்பட்டும், அடுத்ததாக வந்த அரசு மறு ஆய்வு செய்தது. அதை, உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
தள்ளுபடி
இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஏற்காட்டில் கட்டுமானப் பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் இருந்தன. உடனடியாக பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. அதனால், அதிக செலவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே, அரசு எடுத்த கொள்கை முடிவில் குறுக்கிட, வலுவான காரணங்கள் இல்லாததால், இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. முந்தைய அரசு எடுத்த முடிவுகளை மறு ஆய்வு செய்யும் போது, அரசுக்கு சில பரிந்துரைகளை அளிக்க, இந்த நீதிமன்றம் விரும்புகிறது... பொது மக்களுக்கான பயனுள்ள திட்டம் குறித்து, முந்தைய அரசு முடிவெடுத்திருந்து,
அந்த திட்டம் முடியும் தருவாயில் அல்லது தொடர்ந்து கொண்டிருந்தால், அதை பிந்தைய அரசும் தொடரலாம் மக்கள் நல திட்டங்களுக்காக கணிசமான தொகையை, முந்தைய அரசு செலவு செய்திருந்தால், அது வீணாகி விடக் கூடாது என்பதை, பிந்தைய அரசு மனதில் கொள்ள வேண்டும். ஏற்கனவே செலவு செய்த நிதியை பயன்படுத்த மாற்று திட்டம் இருந்தாலும், அது எதிர்பார்த்த அளவில் இருக்காது ஆட்சியில் உள்ள ஒரு கட்சி, முந்தைய ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய தேவையில்லை.
முந்தைய அரசு எடுத்த முடிவுகள், மக்கள் நலனுக்கு பாதகமாக இருந்தால், அத்தகைய முடிவுகளை மறுஆய்வு செய்யலாம் சில முடிவுகள், மக்கள் நலனுக்கு பாதகமாக இருந்தாலும், அரசுக்கு வரும் வருவாயை கருதி, அந்த கொள்கை முடிவை, தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்கள் கைவிடுவது இல்லை. உதாரணத்துக்கு, 50 ஆண்டுகளாக, தமிழகத்தில் மது விற்பனை கொள்கையை, தொடர்ந்து வரும் அரசுகள் கடைப்பிடித்து வருகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விடியல் டுமீல்நாட்டை அழிக்க பண்ணிவிட்டான்