கள்ளக்காதல் விவகாரத்தில் ஆப்பரேட்டர் கொலை மற்றொரு கள்ளக்காதலனுடன் காதலியும் கைது
தர்மபுரி, -தர்மபுரியில், கள்ளக்காதல் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு கள்ளக்காதலனுடன் காதலியும் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி அடுத்த சவுளூர் மேம்பாலம் அருகே கடந்த, 9ம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர், தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். இறந்து கிடந்தவர் தர்மபுரி அடுத்த பூகானஹள்ளியை சேர்ந்த மாது, 45, என்பதும், இவர், தர்மபுரியில் மைக்செட் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. விசாரணையில், மாதுக்கும், சத்யா நகரை சேர்ந்த தனியார் பள்ளி சமையலர் சித்ரா, 36, என்பவருக்கும், மூன்றாண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன் சித்ராவுக்கும், அவர் பணியாற்றிய பள்ளியில் பஸ் டிரைவாக சேர்ந்த நல்லம்பள்ளி கிருஷ்ணன், 42, என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், சித்ராவுக்கும், மாதுவுக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 9ம் தேதி இரவு சித்ராவின் வீட்டில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சித்ரா மொபைல் போன் மூலம் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். சித்ரா வீட்டுக்கு இரும்பு ராடுடன் வந்த கிருஷ்ணன், மாதுவின் பின் பக்க தலையில் தாக்கி கொலை செய்தார். பின்னர் உடலை சித்ராவின் ஸ்கூட்டரில் எடுத்து சென்ற கிருஷ்ணன், சவுளூர் மேம்பாலம் அருகே வீசி சென்றது தெரியவந்தது.இது குறித்து வழக்கு பதிவு செய்த தர்மபுரி டவுன் போலீசார் நேற்று சித்ரா, கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!