குன்றத்துார் தொழிலதிபர் வீட்டில்100 சவரன் நகைகள் கொள்ளை
குன்றத்துார், : சென்னை, அனகாபுத்துார் புறவழிச்சாலையின் அணுகு சாலையை ஒட்டி, 'அம்சா லெதர்ஸ்' என்ற பெயரில், தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசாத், 42.இவர், குடும்பத்தினருடன் குன்றத்துாரை அடுத்த மணிகண்டன் நகரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பில், 2012ம் ஆண்டு முதல் வசிக்கிறார்.ஆசாத், கடந்த 8ம் தேதி மனைவி மானசா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரு சென்றார்.
அங்கிருந்து, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, சென்னை திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்தது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசாத், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். சோதனையில், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், லாக்கரை உடைத்து, 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து விசாரித்துவருகின்றனர்.தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!