இளைய தலைமுறை விழிப்புணர்வு பெற டாக்டர்கள் பங்களிப்பு: கலெக்டர் பேச்சு
நாமக்கல்,-''குழந்தை திருமணம் நடைபெறாத, பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாத, விழிப்புணர்வு பெற்ற இளைய தலைமுறையை உருவாக்க, டாக்டர்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்'' என்று நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பள்ளி சிறார் நலத்திட்டம் சார்பில், டாக்டர்களுக்கான தலைமை பயிற்றுனர் பயிற்சி வகுப்பு, நாமக்கல்லில் நடந்தது. இதற்கு தலைமை வகித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது: பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 15 ஆண் டாக்டர்கள், 15 பெண் டாக்டர்கள் பணியில் ஈடுபட்டு, ஆண்டுக்கு ஒரு முறை, அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மாணவ, மாணவியருக்கு கண்பார்வை, காது கேட்பு மற்றும் உடல் நலம் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.தேவைப்பட்டால், இருதய பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்து, கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குழந்தை திருமணம் நடைபெறாத, பாலியல் துன்புறுத்தல்கள் நிகழாத, விழிப்புணர்வு பெற்ற இளைய தலைமுறையை உருவாக்க, உங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!