மாம்பாக்கம் கூட்டுச்சாலையைசுற்றி சுற்றி வரும் வாகனங்கள்
திருப்போரூர் : மாம்பாக்கம் நான்குமுனை சந்திப்பு சாலையில், 20 அடியில் கடக்க வேண்டிய பகுதிகளை, 2 முதல் 4 கி.மீ., வரை சுற்றி செல்வதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்குமுனை சந்திப்பு சாலை உள்ளது.
சாலையின் கிழக்கில்கேளம்பாக்கம்; மேற்கில் வண்டலுார்; வடக்கில் மேடவாக்கம்; தெற்கு புறத்தில் காயார் சாலைகள் உள்ளன.நான்கு புறங்களில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க, அந்த இடத்தில் போலீசார், இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.இந்நடவடிக்கையால், கேளம்பாக்கம் மற்றும் காயார் சாலையிலிருந்து மேடவாக்கம் செல்லும் வாகனங்கள், மாம்பாக்கம் சமத்துவபுரம் குடியிருப்பு அருகே திரும்பி, அதே இடத்திற்கு வந்து, மேடவாக்கம் சாலையில் செல்கின்றன. இப்படி வாகனங்கள் சுற்றும் தொலைவு 2 கி.மீ., ஆகிறது.அதேபோல், மேடவாக்கம் மற்றும் வண்டலுார் சாலையிலிருந்து, காயார் சாலையில் செல்லும் வாகனங்கள், சோணலுார் சந்திப்பு மற்றும் மாம்பாக்கம் பள்ளி அருகே திரும்பி வந்து செல்வதால், 2 முதல் 4 கி.மீ., கூடுதலாகிறது.
இதனால், 20 அடியில் கடக்க வேண்டிய சாலையை, 2 முதல் 4 கி.மீ., வரை சுற்றி கடப்பதால், கால விரயம் மற்றும் எரிபொருள் வீணாகிறது.இந்த சிரமத்தை தவிர்க்க, இரும்பு தடுப்புகளை அகற்றி, ஏற்கனவே உள்ள சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.தவிர, போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு, நான்கு தடத்திலிருந்து வரும் வாகனங்களை, சுழற்சி முறையில் விடவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!