வேளாண் ஏற்றுமதி முனையம் அமைக்க ரூ.200 கோடி! 5 லட்சம் கிலோ விளை பொருட்களை சேமிக்க வாய்ப்பு


குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 35 ஏக்கர் மேயக்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண் ஏற்றுமதி முனையம் திட்டப் பணிகள் மேற்கொள்ள, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இங்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து, காய்கறி மற்றும் வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டிய பொருட்களாக விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும், 3 லட்சம் கிலோ முதல், 5 லட்சம் கிலோ காய்கறி வரையில் இருப்பு வைத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட உள்ளது.இதற்கு தேவையான கிடங்கு, காய்கறி சுத்தம் செய்யும் குடோன், தரம்பிரிக்கும் கூடாரம், 'பேக்கிங்' செய்யும் அறை, குளிரூட்டும் அறை என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.இந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணிக்கு, 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என, வேளாண் விற்பனை துறையினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் கூறியதாவது:குன்றத்துார் அடுத்த, நாவலுார் பகுதியில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் துவக்க, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு, அரசு அனுமதி அளித்துள்ளது
.இதற்கு, 35 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்நிறுவனத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நிறுவனம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாக, 1,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும்.மேலும், உழவர் உற்பத்தி நிறுவனத்தினரின் விளை பொருட்களுக்குரிய விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
5 லட்சம் கிலோ எடை இருப்பு வைக்கும் பெரிய கிடங்கு காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு, பிரம்மாண்டமான தொட்டிகள் மற்றும் ராட்சத இணைப்பு குழாய்கள் காய்கறிகள் கெடாமல் இருப்பதற்கு, குளிரூட்டப்படும் இருப்பு வைக்கும் அறைகள் பழங்களை உலர்த்துவதற்கு, சோலாரில் இயக்கக்கூடிய உலர்த்தி கூடாரம் தரம் பிரிக்கும் கூடாரங்கள்
நெல், வேர்க்கடலை, காய்கறி ஆகிய விளை பொருட்கள் உழவர் களஞ்சிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கீழ் இருக்கும் பெரும்பாலான விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலுார், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள், இத்திட்டத்தால் பயன்பெறுவர்.
வாசகர் கருத்து (3)
ஐந்து லட்சம் கிலோ சேமிப்பு கிடங்கு என்று பிரமாண்டப் படுத்துவதில் ஒன்றும் பிரமாதம் இல்லை .ஐந்து லட்சம் கிலோ என்பது வெறும் ஐநூறு டன் தான் .மாநிலத்தில் நெல் கோதுமை காய்கறிகள் போன்றவற்றை சேமிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சேமிப்பு கிடங்கு தேவை.அதற்கு அரசு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக தெரியவில்லை . அதை செய்தால் பெருமை போட்டுக்கொள்ளலாம் .செய்வார்களா ?
ஏற்கனவே உள்ள புகழ்பெற்ற தெருக்களின் பெயரை கட்டுமரத்துக்கு மாற்றுவதைத் தவிர்த்து, இது மாதிரி மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்யுங்க. எவன் பேரையாவது வெச்சுக்கோங்க.
பாராட்டத்தக்க செயல். அவ்வப்பொழுது ஆட்சி மாற்றம் நடந்தால் முந்தைய ஆட்சியைவிடத் தாங்கள் சிறப்பாக ஆள்வதாகக் காட்டிக்கொள்ள ஆளுவோர் செய்யும் பத்துச் செயல்களில் ஒன்றிரண்டாவது மக்களுக்குப் பலன் தரும் இதனை அறிந்து ஆட்சியை மாற்றும் தமிழக மக்கள் புத்திசாலிகள். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் அதனை ஆதரிப்பது அவசியம் மானியம் சலுகை இவற்றுக்குப் பதில் தேவைப்படும் சந்தைகளைத் தேர்வு செய்ய வழிமுறைகள் பொருட்களை பாதுகாப்பாக வைக்காத தக்க கிடங்குகள், முறையான, குறைவான கட்டணத்தில் பொருட்களை எடுத்துச் செல்லாத தக்க போக்குவரத்து வசதிகள் மதிப்புக்கு கூட்டல் முறையில் பொருட்களை மாற்றி அதீத விளைச்சலால் இழப்பு ஏற்படுவதனைத் தவிர்த்தல் இவற்றையும் செய்ய உதவினால் அது சிறப்பே பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தை குறைக்கலாம் அல்லது ஒரு பங்கை அரசே கட்டலாம் அடிக்கும் கொள்ளையில் ஒரு பங்காவது மக்களுக்கு கொடுக்கலாம் என கழகக் கொள்கையைப் பாராட்டுவோம்